குழித்துறையில் பரபரப்பு அண்ணா சிலை பீடத்தில் காவி துணி: போலீசில் திமுக புகார்

மார்த்தாண்டம்: குமரி மாவட்டம் குழித்துறை ஜங்ஷனில் அண்ணாவின் முழு உருவசிலை உள்ளது. அவருடைய பிறந்த நாள் விழாவில் திமுக, அதிமுக உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம். இந்த நிலையில் நேற்று காலை அண்ணா சிலை பீடத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ள தடுப்பு கம்பியில் காவி துணி ஒன்று கட்டப்பட்டிருந்தது. இதை பார்த்த திமுக, அதிமுக கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து களியக்காவிளை போலீசாரும் வந்து பார்த்தனர்.

இதுதொடர்பாக திமுக சார்பில் குழித்துறை நகர செயலாளர் ஆசைதம்பி போலீசில் புகார் செய்துள்ளார். அதன்பேரில், போலீசார் விசாரித்தனர். குழித்துறை ஜங்ஷனில் தனியார் ஓட்டலில் உள்ள சிசிடிவி காட்சிகளை எடுத்து சென்று பார்வையிட்டனர். இதில் அதிகாலையில் அப்பகுதியில் தினமும் நடமாடும் ஒரு முதியவர் படி வழியாக ஏறுவதும், தனது தோளில் கிடந்த துண்டை அந்த கம்பியில் போடுவதும் பதிவாகியிருந்தது. இதுதொடர்பாக திருத்தவபுரத்தை சேர்ந்த தங்கராஜ் (68) என்பவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கண்டனம்: தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், தி.க.தலைவர் கி.வீரமணி, பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அமமுக பொதுச்செயலாளர்தினகரன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Related Stories: