கிரி பிரகாரம் இடிந்து இரண்டரை ஆண்டுக்கு பின் திருச்செந்தூர் கோயிலில் ரூ.1 கோடியில் மேற்கூரை பணி தீவிரம்

திருச்செந்தூர்: கிரிவலப்பிரகாரம் இடிந்து இரண்டரை ஆண்டுகளை கடந்த நிலையில் திருச்செந்தூரில் தற்போது ரூ.1 கோடி மதிப்பில் மேற்கூரை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஆன்மீக சுற்றுலா தலமான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடாக திகழ்கிறது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் தைப்பூசம், வைகாசி விசாகம், கந்தசஷ்டி, மாசித்திருவிழா என வருடம் முழுவதும் திருவிழா களைகட்டும். உள்ளூர், வெளியூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற நாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வர்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் யாரும் எதிர்பாராத வகையில் கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி கிரிவலப்பிரகாரம் இடிந்து விழுந்தது. இதில் பேச்சியம்மாள் என்பவர் உயிரிழந்தார். அதனைத்தொடர்ந்து கலெக்டர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு மற்ற பிரகாரங்களும் பராமரிப்பின்றி இடியும் நிலையில் இருந்ததால் அவையும் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது.  இதேபோல் கோயிலுக்கு சொந்தமான 300க்கும் மேற்பட்ட விடுதி அறைகளும் தங்குவதற்கு லாயக்கற்ற நிலையில் இருந்ததால் அவைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டது. கிரிவலப்பிரகாரம் இடிந்து விழுந்து தற்போது இரண்டரை ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் அதனை கட்டுவதற்கு அறநிலையத்துறையோ, கோயில் நிர்வாகமோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதேபோல் சீல் வைக்கப்பட்ட விடுதி அறைகளும் அப்படியே இருக்கிறது.

அவற்றை இடித்து விட்டு புதிய விடுதிகள் கட்டுவதற்கும் நடவடிக்கை எடுக்கவில்லை. நடந்து முடிந்த கந்தசஷ்டி திருவிழாவின் போது கிரிவலப்பிரகாரம் முழுவதும் வாடகை அடிப்படையில் தற்காலிக ஷெட் அமைக்கப்பட்டிருந்தது. தற்போது கல் மண்டபம் கட்டும் வரை நிரந்தரமாக 20 அடி உயரம், 20 அடி அகலத்தில் தங்கத்தேர் செல்லும் வகையில் தனியார் நிறுவனம் சார்பில் ரூ.1 கோடி மதிப்பில் இரும்பு குழாய்கள் நடப்பட்டு தகரஷெட் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் வடக்கு பிரகாரத்தில் இருந்து வள்ளிக்குகைக்கு செல்லும் பாதை, கிழக்கில் தங்கத்தேர் நிற்கும் இடத்தில் இருந்து திருமண மண்டபம் வரையும் தகரஷெட் அமைக்கப்படுகிறது. எனினும் நிரந்தர கல் மண்டபம் அமைக்க இந்து அறநிலையத்துறை மற்றும்  மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: