சென்னையில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியது; மருத்துவ நிபுணர்களின் கருத்து அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை: முதல்வர் பழனிசாமி பேட்டி..!!!

சென்னை: கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நாளையுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து, ஊரடங்கை நீட்டிக்கலாமா? அல்லது மேலும் தளர்வுகளை அறிவிக்கலாமா? என்பது குறித்து நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தப்படி காணொலி காட்சி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து, இன்று மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்கள பணியாளர்களின் கடின உழைப்பால் சென்னையில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளது என்றார்.

மேலும் பேசிய அவர், ஒவ்வொரு வீட்டிற்கும் பத்திற்கும் மேற்பட்ட முறை சென்று காய்ச்சல் இருக்கிறதா என பரிசோதனை நடத்தி வருகிறோம். இதுவரை 14 லட்சம் பேர் காய்ச்சல் முகாம்களால் பயன் அடைந்துள்ளனர். இந்தியாவிலேயே அதிக பரிசோதனை மையங்கள் உள்ள மற்றும் அதிக பரிசோதனை செய்த மாநிலமும் தமிழகம்தான். 23 லட்சத்து 36 ஆயிரத்து 550 பரிசோதனை செய்து நாட்டிலேயே அதிக பரிசோதனை செய்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.

நடமாடும் கொரோனா பரிசோதனை வாகனங்கள் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தொற்று குறைக்கப்பட்டது. சென்னையில் 1,196 நடமாடும் மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. அனைவருக்கும் முகக்கவசம் வழங்கும் திட்டத்தின் கீழ் நபர் ஒருவருக்கு தலா 2 முகக்கவசம் வழங்கப்படும். தொற்று ஆளானவர்கள் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது.

சென்னையைப் போல் தமிழகத்தில் பிற மாவட்டங்களிலும் தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. மருத்துவ நிபுணர்களின் கருத்துக்கு முக்கியத்துவம் அளித்து தமிழக அரசு செயல்படுகிறது. மருத்துவ நிபுணர்களின் கருத்து அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Related Stories: