ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை: அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

ஆன்லைன் சூதாட்டங்களுக்கு அடிமையாகி, பணம், நிம்மதி உள்ளிட்ட அனைத்தையும் இழந்து தற்கொலை செய்து கொள்ளும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாமக பலமுறை வலியுறுத்தியும், உயர் நீதிமன்றம் ஆணையிட்டும் கூட ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காதது வேதனையளிக்கிறது. சென்னை அண்ணாநகரை அடுத்த டி.பி.சத்திரம் பகுதியைச் சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவர் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி பல்லாயிரக்கணக்கான ரூபாய் பணத்தை இழந்ததால், தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். தெலங்கானா மாநிலத்தில் ஆன்லைன் சூதாட்ட கொடுமைகளுக்கு முடிவு கட்டும் வகையில், அனைத்து வகையான ஆன்லைன் சூதாட்டங்களுக்கும் அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. அதேபோல், தமிழ்நாட்டிலும் ஆன்லைன் சூதாட்டங்களை தடை விதிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் இனியும் தாமதமோ, அலட்சியமோ காட்டக்கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: