ஆன்லைனில் ஏன் நீட் தேர்வை நடத்தக்கூடாது: மருத்துவ கவுன்சிலுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி..!!

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவியுள்ள நேரத்தில் வளைகுடா நாடுகளில் நீட் தேர்வு நடந்த எடுத்த நடவடிக்கை என்ன என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தேர்வு மையங்கள் அமைக்கப்படுமா, தள்ளிவைக்கப்படுமா என மத்திய அரசு, மருத்துவ கவுன்சில் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆன்லைனில் ஏன் நீட் தேர்வை நடத்தக்கூடாது எனவும் மருத்துவ கவுன்சிலுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் நடக்கவிருந்த நிலையில் கொரோனா பாதிப்பின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே தற்போது மீண்டும் அந்தத் தேர்வு செப்டம்பர் 16ம் தேதிக்கு ஒத்திவைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வு கட்டாயம். அகில இந்திய நுழைவுத் தேர்வான இது கடந்த மே மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் அந்தத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்தது.

இந்த நீட் தேர்வில் பங்கேற்க நாடு முழுவதுமிருந்து 16 லட்சம் மாணவ மாணவியரும், குறிப்பாக தமிழகத்தில் சுமார் 1 லட்சத்து 17 ஆயிரம் பேர் பதிவு செய்திருந்துள்ளனர். இருப்பினும், பொது ஊரடங்கு நீடித்து வருவதாலும், கொரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும் மேற்கண்ட அறிவிப்பின்படி நீட் தேர்வை மே மாதம் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து நீட் தேர்வுகள் வருகின்ற செப்டம்பர் 16ம் தேதிக்கு ஒத்திவைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

மேலும், இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் இன்று விசாரணைக்கு வந்ததையடுத்து ஆன்லைனில் ஏன் நீட் தேர்வை நடத்தக்கூடாது எனவும் மருத்துவ கவுன்சிலுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் தேர்வு நடத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து விளக்கம் கேட்டுள்ளனர்.

Related Stories: