எல்லாமே ஹைடெக்குங்க... 60 ஆயிரம் பஞ்சாயத்துகளுக்கு ஜாக்பாட்: பொருளாதார மேம்பாட்டு பணி அக்டோபரில் துவக்கம்

புதுடெல்லி: பிரதமர் மோடியின் திட்டப்படி 60 ஆயிரம் கிராம பஞ்சாயத்துகளை பொருளாதார அளவில் மேம்படுத்தும் பணிகள் அக்டோபரில் தொடங்கப்பட உள்ளன. இந்தியா முழுவதும் 2.50 லட்சம் கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. கொரோனா ஊரடங்கு காரணமாக கிராம பொருளாதாரம் அடியோடு சரிந்து விட்டது. மேலும், நாடு முழுவதும் நேரடி மற்றும் மறைமுக தொழிலில் ஈடுபட்ட கோடிக்கணக்கானோர் வேலை இழந்து தவிக்கிறார்கள். எனவே, கிராமப்புற பொருளாதார சரிவை தடுத்து நிறுத்த பிரதமர் மோடி, ‘அத்மானிர்பார் பாரத்’ திட்டத்தின் கீழ் கிராம பஞ்சாயத்துகளை கையில் எடுத்துள்ளார்.

அங்கு டிஜிட்டல் பயிற்சி மையங்கள், ஆசிரியர்கள், சுகாதார அலுவலர்கள் தங்க வசதியாக அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் கைவினை கலைஞர்கள், நெசவுத் தொழிலாளர்கள் பொருட்களை சந்தைப்படுத்த வசதியாக விற்பனை கூடங்கள் உள்ளிட்ட ஏராளமான வசதிகளை செய்து கொடுக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான திட்டங்களை ஐஐடி கோரக்பூர், ஐஐடி ரூர்கி, போபால் திட்டமிடல் நிறுவனம், அகமதாபாத் சிஇபிடி பல்கலை ஆகியவை இணைந்து மத்திய அரசிடம் ஒப்படைத்துள்ளன. இதற்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது.

அதன்படி, முதல்கட்டமாக தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் அருகில் இருந்து 60 ஆயிரம் கிராம பஞ்சாயத்துகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில், 13 மாநிலங்களில் 32 கிராம பஞ்சாயத்துகளில் வரும் அக்டோபரில் இந்த மேம்பாடு பணிகள் தொடங்கப்பட உள்ளன. இதன் மூலம், கிராம  பொருளாதாரத்தை பெருநகர பொருளாதார அளவிற்கு உயர்த்தும் மோடியின் திட்டத்தை அமல்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்பின், படிப்படியாக நாடு முழுவதும் இந்த திட்டம் கொண்டு செல்லப்படும். 2.50 லட்சத்திற்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகளில் இந்த திட்டம் அமல்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

* தேர்வு செய்யப்பட்ட பஞ்சாயத்துகளுக்கு மத்திய அரசின் நிதி கொட்டும்.

* அங்கு நவீன மருத்துவமனை மற்றும் பள்ளி வசதிகள் செய்து கொடுக்கப்படும்.

* கிராமங்களில் உள்ள தொழில்களுக்கு ஏற்ப விற்பனை மையங்கள் உருவாக்கப்படும்.

* தயாரிக்கப்படும் பொருட்களை ஆன்லைன் மூலம் விற்க டிஜிட்டல் மையங்கள் அமைக்கப்படும்.

Related Stories: