புதுக்கோட்டை மாவட்டத்தில் பணியினை முறையாக செய்யாத குற்றச்சாட்டில் 35 காவல் ஆய்வாளர்களுக்கு எஸ்.பி. நோட்டீஸ்!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் பணியினை முறையாக செய்யவில்லை என்ற குற்றச்சாட்டில் 30க்கும் அதிகமான காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களுக்கு காவல் கண்காணிப்பாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் 38 காவல் நிலையங்கள் உள்ளன. இந்த காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மதுவிற்பனை, கஞ்சா, மணல் கடத்தல் உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பொதுமக்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு புகார் அளித்த வண்ணம் இருந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிய காவல்துறை கண்காணிப்பாளராக பாலாஜி சரவணன் கடந்த மாதம் 12ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிலையில் அந்த புகாரின் அடிப்படையில் ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் தனி குழு அமைத்து சோதனை மேற்கொண்ட போது, பல்வேறு இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றது தெரியவந்தது. இதனையடுத்து சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் மீது எஸ்.பி. அனுப்பிய தனிப்படை போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் பணியினை முறையாக செய்யாத புகாரில் 35 காவல் ஆய்வாளர்களுக்கு எஸ்.பி. நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதில் தங்கள் காவல் சரகத்தில் சட்டத்திற்கு புறமாக மது, கஞ்சா, மணல், சீட்டாட்டம் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி பலமுறை குறிப்பாணை அனுப்பி வழக்குப்பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தும், மேற்படி நபர் மீது நீர் சட்டப்படி நடவடிக்கை எடுக்க தவறிய உமது மெத்தனப்போக்கான செயலுக்கு ஏன் உம் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதற்கான எழுத்துப்பூர்வமான விளக்கத்தினை இக்குறிப்பாணை பெற்ற மூன்று நாட்களுக்குள் எமது அலுவலகத்திற்கு அளிக்க இக்குறிப்பாணை மூலம் அறிவுறுத்தப்படுகிறது. மாறாக தவறும் பட்சத்தில் உம் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை இதன் மூலம் அறிய கடவீர் என குறிப்பிடப்பட்டிருந்தது. அவர்களிடம் இருந்து விளக்கம் பெற்றப்பின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எஸ்.பி. தெரிவித்துள்ளார்.

Related Stories: