உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் விவசாய வருமானத்தை அதிகரிக்க கொள்கைகள் வகுப்பது அவசியம்: ரிசர்வ் வங்கி கவர்னர் வலியுறுத்தல்

புதுடெல்லி: விவசாய வருவாயை அதிகரிக்க புதிய கொள்கைகள் வகுக்கப்பட வேண்டியது அவசியம். உள்கட்டமைப்பு மேம்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டும் என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் கூறினார். இந்திய தொழில்வர்த்தக சபை தேசிய கவுன்சில் ஏற்பாடு செய்த கூட்டத்தில், காணொளி காட்சி மூலம் பங்கேற்று, ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் பேசியதாவது: பொருளாதார வளர்ச்சிக்கு உள்கட்டமைப்பு மேம்பாடு செய்ய வேண்டும். இதற்கு மிக அதிக முதலீடுகள் தேவை. இதில், தனியார் துறைகளின் பங்களிப்பு மிக முக்கிமானதாக இருக்கும்.

இதனால் பொருளாதாரம் ஏற்றம் அடையும். அதோடு, இத்தகைய மேம்பாடுகள், பெரிய திட்டங்கள் செயல்படுத்த காரணமாக அமைந்து, பொருளதார வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும். இதுபோல், விவசாய துறையிலும் மாற்றங்கள் தேவை. சமீபத்தில் விவசாய துறையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள், புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன. இந்த துறை பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுபவை. எனவே, விவசாய வருவாய் அதிகரிப்பதற்கு ஏற்ற கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டியது மிகவும் அவசியம். அதோடு, வர்த்தக ஒருங்கிணைப்பில் தேவையான கவனம் செலுத்த வேண்டும். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் மற்றும் இங்கிலாந்துடனான தாராள வர்த்தக ஒப்பந்தங்களை விைரந்து முடிக்க வேண்டும்.

நாட்டின் பொருளாதார பாதிப்புகள், மாற்றங்கள் குறித்து ரிசர்வ் வங்கி தீவிரமாக விழிப்போடு கண்காணித்து வருகிறது. எனவே, சவால்களை எதிர்கொள்ளும் வகையில் உரிய நடவடிக்கைகள் எடுப்பதற்கு ரிசர்வ் வங்கி ஒரு போதும் தயங்காது. நிறுவனங்களின் பத்திர சந்தையை மீட்டெடுக்க பல்வேறு ஊக்க திட்டங்களை ரிசரவ் வங்கி மேற்கொண்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் பெரு நிறுவனங்களின் பத்திர விநியோகம் ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டிவிட்டது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் அதிகம். இதுபோல் வங்கிகள் மூலதனத்தை அதிகரித்து சவால்களை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். கொரோனா பரவல் காரணமாக பல்வேறு பாதிப்புகள் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ளது.

* சுற்றுலாத்துறை, சிறு, குறு தொழில்கள் கடும் பாதிப்பு

கொரோனா ஊரடங்கால் துறை வாரியாக ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஏற்கெனவே ஆய்வுகள் வெளிவந்துள்ளன. இந்நிலையில், கொரோனா பரவல் துறை வாரியாக ஏற்படுத்திய தாக்கம் தொடர்பாக ரிசர்வ் வங்கி சார்பில் சர்வே வெளியிடப்பட்டுள்ளது. அதில், சுற்றுலா, கட்டுமானம், விமானப்போக்குவரத்து, ஆட்டோமொபைல், குறு. சிறு மற்றும் நடுத்தர தொழில்துறைகள் படு மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. பாதிப்பில் இருந்து வரும் 6 மாதங்களுக்குள் மீள்வது சிரமம் என சுற்றுலாத்துறையில் 90 சதவீதம் பேர், விமான போக்குவரத்து துறையில் 85 சதவீதம் பேர், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையில் 60 சதவீதம் பேர், ஆட்டோமொபைல், கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் துறையில் 50 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர் என சர்வேயில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: