நான்கு ஆண்டுகளாக BC, MBC மாணவர்களுக்கு பாஜக அரசு இழைத்த அநீதிக்கு நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கியிருக்கிறது: மு.க.ஸ்டாலின் ட்வீட்

சென்னை: நான்கு ஆண்டுகளாக BC, MBC மாணவர்களுக்கு பாஜக அரசு இழைத்த அநீதிக்கு நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கியிருக்கிறது என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், சமூகநீதி வீழ்த்தப்படும் போதெல்லாம் தமிழகமே ஓரணியில் நிற்கும் என்றும், மேல்முறையீடு தவிர்த்து உடனே இடஒதுக்கீடு வழங்குக எனவும் அவர் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாது, இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவ இடங்களில் பிற்படுத்தப்பட்ட(பி.சி, எம்.பி.சி) சமுதாயத்திற்கு இடஒதுக்கீடு உரிமை உண்டு என்று திமுக தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நான்கு வருடங்களாக இதரப் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை மத்தியில் உள்ள பாஜக அரசு நிராகரித்து வந்திருக்கிறது. திமுக சார்பில் எம்.பி. வில்சன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதினார், நேரில் மனு அளித்தார், கழக உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினார்கள்.

நானும் பிரதமருக்கு கடிதம் எழுதினேன். நேற்று கூட அகில இந்திய தலைவர்களிடம் திமுகவின் போராட்டத்திற்கு ஆதரவு கோரி கடிதம் அனுப்பினேன். திமுக சார்பில் வழக்கும் தொடர்ந்தோம். தமிழகமே ஓரணியில் நிற்கும் வகையில், வழக்கு தொடுத்த மற்ற கட்சிகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்க முடியாது என்று இந்திய மருத்துவக் கழகத்தை விட்டு நீதிமன்றத்தில் வாதிட வைத்தது பாஜக அரசு. சமூகநீதிப் போராட்டத்திற்கு கிடைத்திருக்கிறது. தீர்ப்பினை ஏற்று, உடனடியாக தமிழகத்தில் 50% இடஒதுக்கீட்டை பிற்படுத்தப்பட்ட(பி.சி), மிகவும் பிற்படுத்தப்பட்ட(எம்.பி.சி) மாணவர்களுக்கு இந்த கல்வியாண்டிலேயே வழங்கிட வேண்டும். மத்திய பாஜக அரசு மேல்முறையீடு எதுவும் செய்திடக்கூடாது என்று நாடு முழுவதுமுள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். சமூக நீதி வரலாற்றில் இது ஒரு பொன்னான நாள், என கூறியுள்ளார்.

Related Stories: