கார்கில் போரில் பங்கேற்ற இந்திய ராணுவ வீரர்கள் வீரம் தலைமுறைகளை ஊக்குவிக்கும்: பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: ‘‘கார்கில் போரில் பங்கேற்று வெற்றியை நிலைநாட்டிய, இந்திய ராணுவ வீரர்களின் வீரம், நாட்டின் இளைய தலைமுறைகளை ஊக்குவிப்பதாக இருக்கிறது,’’ என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறன்று வானொலியில், ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி மூலமாக நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். நேற்று அவர் ஆற்றிய உரையில் பேசியதாவது: இந்தியாவின் கார்கில் போர் வெற்றியை பறைசாற்றும் வகையில் கார்கில் வெற்றி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

1999ம் ஆண்டு நமது நாட்டை உறுதியுடன் பாதுகாத்த நமது ராணுவ வீரர்களின் தைரியத்தையும், உறுதியையும் நாம் நினைவு கூர்வோம். கார்கில் மலை உச்சியில் எதிரிகள் நமது துணிச்சல் மிகுந்த வீரர்களால் தோற்கடிக்கப்பட்டனர். ராணுவ வீரர்களின் வீரமானது தொடர்ந்து நமது தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கிறது. கொரோனா நோய் தொற்று அச்சுறுத்தலுக்கு இடையே இந்த ஆண்டு சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவை தன்னம்பிக்கை மிக்கதாகவும், கொரோனா நோய் தொற்று இல்லாத நாடாகவும் மாற்றுவோம் என இளைஞர்கள் உறுதியேற்க  வேண்டும்.  நாடு முழுவதும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு, மாநில அரசு, உள்ளூர் நிர்வாகம், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் சமூக தொண்டு நிறுவனங்கள் செய்து வருகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.

* நாமக்கல் மாணவி கனிகாவுக்கு பாராட்டு

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வில் 500க்கு 490 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த நாமக்கலை சேர்ந்த லாரி ஓட்டுநர் எஸ்.கே.நடராஜன் மகள் கனிகாவுடன் பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் நேற்று கலந்துரையாடினார். ஏழைக் குடும்பத்தில் பிறந்து மிக நல்ல முறையில் கல்வி கற்று மருத்துவராக வரவேண்டும் என்ற கனவுடன், லட்சியத்துடன் தமது கல்வி பயணத்தை தொடரும் மாணவிக்கு பிரதமர் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும், ஏழைக் குடும்பத்தில் இருந்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்கள் மிக நல்ல முறையில் நாட்டிற்கு சேவை ஆற்ற முடியும் என்றும் அவர் பாராட்டினார். கனிகாவின் சகோதரி ஷிவானியும் மருத்துவம் படித்து வருவதையும் பிரதமர் பாராட்டினார். பிரதமரிடம் பேசியது மிக மகிழ்ச்சியாகவும் ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாகவும் மாணவி கனிகாவும், அவரது பெற்றோரும் நன்றி தெரிவித்தனர்.

Related Stories: