டீசல் மானியம் ரத்து செய்ததற்கு கண்டனம்!: வீடுகளில் கருப்பு கொடி கட்டி காரைக்கால் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

காரைக்கால்: காரைக்கால் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். காரைக்காலில் உள்ள 11 மீனவ கிராமங்களிலும் வீடுகளில் கருப்பு கொடிகளை ஏந்தி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். காரைக்கால் மாவட்டத்தில் கடலோர கிராமங்களான காரைக்கால்மேடு, கிளிஞ்சல் மேடு, காப்பாகுடிமேடு உள்ளிட்ட மீனவ கிராமங்களில் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை கொண்டும், 1000க்கும் மேற்பட்ட பைபர் படகுகளை கொண்டும், 10,000 மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

மத்திய அரசு மீனவர்களுக்கான மானியங்களை நிறுத்தம் செய்ய போவதாக தெரியவந்ததை அடுத்து காரைக்கால் மீனவர்கள் கொதிப்படைந்துள்ளனர். இதையடுத்து மத்திய அரசை கண்டித்து காரைக்காலில் உள்ள 11 மீனவ கிராமங்களை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் கடந்த 21ம் தேதி முதல் 4 நாட்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதோடுமட்டுமின்றி மீன்பிடி தடைக்காலத்தில் வழங்கப்படும் தடைகால நிவாரண நிதியான 5,500 ரூபாய் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள சிவப்பு வண்ண ரேஷன் கார்டுகள் வைத்துள்ள குடும்பங்களுக்கு மட்டுமே வழங்கவிருப்பதாக புதுச்சேரி மீன்வளத்துறை தெரிவித்திருக்கிறது.

கொரோனா ஊரடங்கால் ஏற்கனவே தாங்கள் மீன்களை விற்க முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளோம். இந்நிலையில் மீனவர்களுக்கு மீன்வளத்துறையின் அறிவிப்பு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல அமைந்திருக்கிறது என மீனவர்கள் தெரிவித்துள்ளனர். காரைக்கால் மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களில் 1850 சிவப்பு வண்ண ரேஷன் கார்டுகளும், 1358 மஞ்சள் வண்ண ரேஷன் கார்டுகளும் உள்ளன. அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் எவ்வித பாகுபாடும் இன்றி, மீன்பிடி தடைகால நிவாரணத்தை வழங்க வேண்டும் என்பதே காரைக்கால் மீனவர்கள் கோரிக்கையாகும்.

டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், மீனவர்களுக்கான மானியங்களை நிறுத்தம் இல்லாமல் வழங்க வேண்டும், அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் மீன்பிடி தடைகால நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 4வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்கள், இன்று மீனவ கிராமங்களில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முக்கிய வீதிகள், சாலைகள், வீடுகள்,மின் கம்பங்கள் அனைத்திலும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு கொடி கட்டப்பட்டுள்ளது. கோரிக்கை ஏற்கப்படும் வரை போராட்டம் நடத்தப்போவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: