மறந்து போய்விடும் என்ற கவலை இல்லை மொபைல் பில், இஎம்ஐ கட்டணுமா? யுபிஐ பரிவர்த்தனையில் புதிய வசதி: என்பிசிஐ அறிமுகம்

புதுடெல்லி: மாதாந்திர மொபைல் பில், இஎம்ஐ உட்பட குறிப்பிட்ட கால இடைவெளியில் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளை தானியங்கி முறையில் யுபிஐ பரிவர்த்தனையில் மேற்கொள்ளும் வசதியை, தேசிய பண பரிவர்த்தனை கழகம் அறிமுகம் செய்துள்ளது. கடந்த 2016 நவம்பரில் பணமதிப்பு நீக்கத்துக்கு பிறகு, பணபுழக்க தட்டுப்பாட்டை சமாளிக்கவும், எளிய முறையில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளவும் பீம் செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இதன் பிறகு இந்த ஆப்சை அடிப்படையாக கொண்டு போன் பே, கூகுள் பே, பே டிஎம் மற்றும் பல வங்கிகள் யுபிஐ பரிவர்த்தனைக்காக கூடுதல் வசதிகளுடன் ஆப்ஸ்களை அறிமுகம் செய்தன. இவற்றில் சில, மொபைல் பில், இபி பில் போன்றவற்றை செலுத்த ஏற்கெனவே தானியங்கி பரிவர்த்தனை வசதியை ஏற்படுத்தியுள்ளன.

இந்நிலையில், பின்டெக் ஒருங்கிணைப்பு கவுன்சில் மற்றும் இந்திய பேமண்ட் கவுன்சில் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் தேசிய பண பரிவர்த்தனை கழகம் யுபிஐ பரிவர்த்தனை வசதியை தேசிய பண பரிவர்த்தனை கழகம் அறிமுகம் செய்துள்ளது. பஸ் டிக்கெட், ரயில் டிக்கெட், டிடிஎச் போன்றவற்றுக்கு பணம் செலுத்த இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ள முடியும். இதற்கு இ-மாண்டேட் என்ற வசதியை செயல்படுத்த வேண்டும். பயனாளர் தங்களது யுபிஐ ஐடி அல்லது கியூஆர் ஸ்கேன் மூலம் செயல்படுத்திக் கொள்ளலாம். ரூ.2,000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு தானாகவே பில் தொகை கழிந்து விடும். அதற்கு மேல் செலுத்த வேண்டி வந்தால், ஒவ்வொரு முறையும் யுபிஐ ரகசிய குறியீடு எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும். மேற்கண்ட வசதியை பாரத ஸ்டேட் வங்கி யுபிஐ செயல்படுத்த உள்ளது. இந்த வங்கியின் தலைவர் ரஜ்னீஷ் குமார் கூறுகையில், ‘‘இத்தகைய பரிவர்த்தனை வசதியை பல்வேறு நிறுவனங்கள் கோரி வருகின்றன. எனவே, வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்’’ என்றார்.

* மொபைல் மூலம் எளிதாக பண பரிவர்த்தனை செய்ய பீம் யுபிஐ செயலியை, பணமதிப்பு நீக்கத்துக்கு பிறகு மத்திய அரசு அறிமுகம் செய்தது.

* இதன்மூலம் மொபைல் பில், இஎம்ஐ உட்பட, குறிப்பிட்ட கால இடைவெளியிலான பரிவர்த்தனைகளுக்கு ஒப்புதல் தரலாம்.

* ஏற்கெனவே யுபிஐ அடிப்படையில் செயல்படும் சில செயலிகளில் தானியங்கி முறையில் பில் தொகை செலுத்தும் வசதி உள்ளது.

* இந்தியாவில் தினமும் ரூ.5 லட்சம் கோடி அளவுக்கு சுமார் 10 கோடி டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நடக்கின்றன.

* ஓய்வூதிய, காப்பீடு சேவை; வாட்ஸ்ஆப் திட்டம்

வாட்ஸ்ஆப் நிறுவனம், வங்கிகளுடன் இணைந்து கடன் வழங்கல் மற்றும் ஓய்வூதியம், காப்பீடு சேவைகளை வழங்க திட்டமிட்டுள்ளது. வாட்ஸ்ஆப் தகவல் பரிமாற்ற சேவை மற்றும் வாட்ஸ் ஆப் வர்த்தக செயலி மூலம் இந்த சேவைகள் வழங்க உள்ளது என வாட்ஸ்ஆப் நிறுவனம் பின்டெக் நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே சில வங்கிகள் வாட்ஸ்ஆப் மூலம் வங்கிக்கணக்கில் இருப்பு, பரிவர்த்தனை விவரங்களை பார்க்கும் சேவைகளை வழங்குவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: