ஆண்டிபட்டி அருகே ரேஷன் கடையில் சமூக இடைவெளி ‘மிஸ்சிங்’: கொரோனா பரவும் அபாயம்

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே உள்ள அம்மாபட்டி கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில்  பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டமாக குவிந்ததால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. மக்கள் பலரும் வேலையிழந்து தவித்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து இந்த மாதத்திற்கான ரேஷன் பொருட்களை பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஆண்டிபட்டி ஒன்றியத்தில் உள்ள அம்மாபட்டி கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது.

இந்த பகுதி நேர ரேஷன் கடை, கதிர்நரசிங்கபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்க்கு உட்பட்ட ரேஷன் கடையாகும். இங்கு பொருட்கள் வாங்குவதற்கு பொதுமக்கள் கூட்டம் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ரேஷன் பொருட்கள் வாங்க வாந்த பலரும் முகக்கவசம் அணியவில்லை. குறிப்பாக சமூக இடைவெளியை பின்பற்றாமல் ஒருவருடன் ஒருவர் உரசியபடி கூட்டமாக நின்றிருந்தனர். இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யும் போது மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் போலீசாரின் உதவியுடன் பொருட்களை வழங்க வேண்டும் என்று சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: