கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் திருப்பதியில் 15 நாட்கள் முழு ஊரடங்கு அமல்: மாவட்ட ஆட்சியர் நாராயணா பரத்குப்தா உத்தரவு

திருமலை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் திருப்பதியில் 15 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக சித்தூர் மாவட்ட ஆட்சியர் நாராயணா பரத்குப்தா அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு நாடு முழுவதும் மிக வேகமாக பரவி வரும் நிலையில் இந்தியாவில் சுமார் 11 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆந்திர மாநிலம் திருப்பதியில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மிக அதிகமாக பரவி வருகிறது. குறிப்பாக திருப்பதி திருமலையில் பணியாற்றும் 15 அர்ச்சகர்கள் உட்பட 160 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் இதனையடுத்து அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முதல் முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட அர்ச்சகர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்காக கவுன்டர்களில் டிக்கெட் விநியோகம் நிறுத்தப்படுகிறது. ஆன்லைனில் மட்டுமே திருப்பதி கோவில் தரிசன டிக்கெட் விநியோகம் செய்யப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இந்நிலையில் திருப்பதியில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இன்று முதல் ஆகஸ்ட் 5ம் தேதி வரை 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக சித்தூர் மாவட்ட ஆட்சியர் நாராயணா பரத்குப்தாஅறிவித்துள்ளார்.

திருப்பதி முழுவதும் காலை 6 மணி முதல் 11 மணி வரை மட்டுமே கடைகள், உணவகங்கள் திறந்திருக்க வேண்டும் என்றும் 11 மணிக்குப் பின்னர் பால், மருந்து கடைகள் மட்டுமே திறந்திருக்க வேண்டும் என்றும் 15 நாட்களுக்கு பகல் 11 மணிக்கு மேல் திருப்பதி பகுதியில் பொதுமக்கள் வெளியில் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திருப்பதிக்கு அருகில் உள்ள காளஹஸ்தியில் ஒரு வாரம் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: