ராஜஸ்தான் அரசியலில் களேபரம் சச்சின் பைலட் ‘வெத்துவேட்டு’ முதல்வர் கெலாட் நேரடி தாக்கு: ரூ.35 கோடி பேரம் பேசியதாக காங். எம்எல்ஏ பகீர் குற்றச்சாட்டு

ஜெய்ப்பூர்: ‘சச்சின் பைலட் மாநில காங்கிரஸ் தலைவராக இருக்க தகுதியே இல்லாதவர், எதற்கும் பிரயோஜனம் இல்லாதவர்’ என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் நேரடியாக தாக்கி பேசி உள்ளார். ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட், துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் இடையே அதிகார மோதல் ஏற்பட்டது. இதனால், துணை முதல்வர், மாநில காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டார். அவர் உட்பட 19 அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார்.

இந்த வழக்கை விசாரித்த ஜெய்ப்பூர் உயர் நீதிமன்றம் இன்று (செவ்வாய்கிழமை) வரை எந்த நடவடிக்கையும் எடுக்க கடந்த வெள்ளிக்கிழமை இடைக்கால தடை விதித்தது. இந்த 4 நாள் அவகாசத்தில் சச்சின் பைலட் தரப்பை காங்கிரஸ் மேலிடம் சமாதானப்படுத்தி பிரச்னைக்கு முடிவு கட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பிரச்னையை இடியாப்ப சிக்கலாக்கும் வகையில் நேற்று அடுத்தடுத்து திருப்பங்கள் நடந்தன. முதல்வர் கெலாட் நேற்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில், சச்சின் பைலட் பெயரை குறிப்பிடாமல் அவரை கடுமையாக விமர்சித்தார்.

கெலாட் கூறியதாவது:

அவர் எதற்கும் பிரயோஜனமில்லாதவர், எந்த வேலையும் செய்ய மாட்டார். மாநில காங்கிரஸ் தலைவர் பதவிக்கு லாயக்கில்லாதவர் என்பது தெரிந்தும் கட்சி நலனுக்காக நாங்கள் பொறுத்துக் கொண்டோம். கடந்த 7 ஆண்டாக மாநில கட்சி தலைவரை மாற்ற வேண்டுமென பிரச்னை எழாத மாநிலம் ராஜஸ்தான் மட்டுமே. அந்த அளவுக்கு பொறுமை காத்தோம். எனது அரசை கவிழ்க்க சதி நடக்கிறது என கூறியபோது, யாருமே நம்பவில்லை. அமைதியாக, அப்பாவி போன்ற முகத்தை வைத்துக் கொண்டிருப்பவர் தான் இதற்கெல்லாம் காரணம் என்றபோது நம்ப மறுத்தனர். ஆங்கிலத்திலும் இந்தியிலும் நன்றாக பேசி விட்டால் மட்டும் போதுமா? நான் ஒன்றும் காய்கறி விற்க வரவில்லை. நான் தான் முதல்வர். கட்சி விரோத நடவடிக்கையை பார்த்து சும்மா இருக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, காங்கிரஸ் எம்எல்ஏ கிரிராஜ் சிங் மலிங்கா, பைலட் மீது நேற்று பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தினார். அவர் கூறுகையில், ‘‘நான் சச்சின் பைலட்டிடம் பேசியபோது, பாஜவில் சேர அழைப்பு விடுத்தார். அதற்காக ரூ.30 கோடி முதல் ரூ.35 கோடி வரை தருவதாக கூறினார். நான் மறுத்துவிட்டேன். அதோடு, ஆட்சியை கவிழ்க்க சதி நடப்பதாகவும் முதல்வர் கெலாட்டை எச்சரித்தேன். கடந்த டிசம்பரில் இருந்து சச்சின் பைலட் வீட்டில் ஆட்சி கவிழ்ப்பு தொடர்பாக சதித்திட்டம் வகுக்கப்பட்டு வந்தது’’ என்றார்.

கிரிராஜ் பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து காங்கிரசுக்கு தாவியவர். தன்னுடன் 5 எம்எல்ஏக்களயும் உடன் அழைத்து வந்து மாநில பகுஜன் சமாஜை காங்கிரசுடன் இணைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குற்றச்சாட்டை பைலட் மறுத்துள்ளார். இது தனக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்றும், இதெல்லாம் எதிர்பார்த்த ஒன்றுதான் என அவர் கூறி உள்ளார். இதற்கிடையே, குதிரை பேரம் நடத்திய ஆடியோ தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் குரல் மாதிரிகளை வழங்கக் கோரி, ராஜஸ்தான் போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

* வழக்கு இன்று ஒத்திவைப்பு

இதற்கிடையே, தகுதி நீக்க நோட்டீசை எதிர்த்து சச்சின் தரப்பு தாக்கல் செய்த வழக்கு ஜெய்ப்பூர் உயர் நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. சபாநாயகர் எந்த முடிவும் எடுக்காத நிலையில் இந்த வழக்கு அவசரப்பட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதைக் கேட்ட தலைமை நீதிபதி இந்தரஜித் மொகந்தி விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்தார்.

Related Stories: