மதுரையில் வேகமாக பரவும் கொரோனா பரிசோதனை முடிவு ஏன் தாமதமாகிறது?: ஐகோர்ட் கிளை தாமாக விசாரிக்கிறது

மதுரை: மதுரையில் கொரோனா பரிசோதனை முடிவுகளுக்கு ஏன் தாமதமாகிறது என்பது குறித்து ஐகோர்ட் மதுரை கிளை தாமாக முன் வந்து விசாரிக்கிறது. ஐகோர்ட் மதுரை கிளை பதிவாளர் (நீதித்துறை) தரப்பில் தாமாக முன்வந்து தாக்கல் செய்துள்ள பொதுநல மனு: மதுரையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கொரோனா பரிசோதனை முடிவுகள் கிடைக்க தாமதமாகிறது. இதனால், கொரோனா வேகமாக பரவுகிறது என்றும், மதுரை பல்நோக்கு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சையளிக்கப்படும் வார்டுகளிலுள்ள கழிப்பறைகள் முறையாக பராமரிப்பதில்லை என்பது குறித்தும் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன. அதனடிப்படையில், அவ்வப்போது விரைவான பரிசோதனைகள் மேற்கொள்ள பிசிஆர் கருவிகள் உள்ளிட்டவை போதுமான அளவுக்கு உள்ளதா என்பது குறித்து மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத் துறையினரும் தெரிவிக்க வேண்டும்.

அறிகுறி உள்ளவர்கள் மற்றும் இல்லாதவர்களிடம் எடுக்கப்படும் பரிசோதனை முடிவுகள் வர ஏன் தாமதமாகிறது? இதற்கு என்ன காரணம், அறிகுறி கண்டறிபவர்களுக்குத் தேவையான சிகிச்சையளிக்க வார்டுகள், தனிமைப்பகுதிகள் மற்றும் பாதுகாக்கப்பட்ட வசதிகள் போதுமானதாக உள்ளதா? கழிப்பறை மற்றும் குளியலறை உள்ளிட்டவை கிருமிநாசினி தெளிக்கப்பட்டு முறையாக பராமரிக்கப்படுகிறதா? டாக்டர்கள், சுகாதார பணியாளர்கள், முதுகலை மருத்துவ மாணவர்கள் மற்றும் இதர மருத்துவ பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உடை (பிபிஇ) கவசம் உள்ளிட்டவை போதுமானதாக உள்ளதா? கொரோனா பாதித்து இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யுமிடம் மற்றும் எரியூட்டும் இடங்களில் தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து தெரிவிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

Related Stories: