சுகாதார ஆய்வாளர், நர்சுக்கு கொரோனா; முட்டம் ஆரம்ப சுகாதார நிலையம் மூடல்

குளச்சல்: குமரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் மக்களை மிரட்டி வருகிறது. இந்த வைரசை கட்டுப்படுத்த சுகாதாரத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். முட்டம், குருந்தன்கோடு வட்டார சுகாதார மருத்துவ அலுவலர் பிரதீப்குமார் தலைமையிலான மருத்துவக்குழுவினர் கடந்த 3 நாளாக மணவாளக்குறிச்சி மார்க் கெட்டில் கடைக்காரர்கள், பொது மக்களிடம் சளி மாதிரி எடுக்கும் பணியில் ஈடுபட்டனர். அதன்படி மொத்தம் 93 பேரிடம் சளி மாதிரி எடுக்கப்பட்டது. இதன் முடிவு நேற்று முன்தினம் மாலை சுகாதாரத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனை முடிவில் முட்டம் ஆரம்ப  சுகாதார நிலைய ஆய்வாளர் ஒருவர், மார்க்கெட்டில் உள்ள பெண் மீன் வியாபாரி, இறைச்சி கடைக்காரர், காய்கறி வியாபாரி, பொது மக்கள் உள்பட மொத்தம் 8 பேருக்கு தொற்று உறுதியானது.

இதையனடுத்து உடனடியாக 8 பேரும் ஆசாரிப்பள்ளத்தில் உள்ள தனிமை வார்டில் சேர்க்கப்பட்டனர். இதையடுத்து மணவாளக்குறிச்சி சந்திப்பில் உள்ள மார்க்கெட் மூடப்பட்டது. இன்று (திங்கள்கிழமை) முதல் மார்க்கெட் தற்காலிகமாக பேரூராட்சி அலுவலகம் முன்பு உள்ள பேருந்து நிலையத்தில் செயல்படும் என்று பேரூராட்சி நிர்வாகம், சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதைதொடர்ந்து மணவாளக்குறிச்சி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தொற்று அறியப்பட்ட பகுதியில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது. இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு சளி பரிசோதனை செய்யப்பட உள்ளது. இந்த நிலையில் முட்டம் ஆரம்ப சுகாதார நிலையத்தை சேர்ந்த கிராம நர்சு ஒருவருக்கும் தொற்று உறுதியானது. இதையடுத்து ஆரம்ப சுகாதார நிலையம் இழுத்து மூடப்பட்டது. பின்னர் அந்த பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு சளி மாதிரி பரிசோதனை நடந்தது. முட்டம் சுகாதாரம் நிலையம் மூடப்பட்டதால் மருத்துவர்கள், களப்பணியாளர்கள் வெள்ளிச்சந்தை, குருந்தன்கோடு, சேரமங்கலம் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து களப்பணி செய்து வருகின்றனர்.

Related Stories: