கொரோனா ஊரடங்கால் ஓமலூரில் ரூ100 கோடிக்கு பட்டு சேலைகள் தேக்கம்: நெசவு தொழிலாளர்கள் வருவாயின்றி தவிப்பு

ஓமலூர்: ஓமலூர் பகுதியில் கொரோனா ஊரடங்கால், ₹100 கோடி மதிப்பிலான பட்டு சேலைகள் தேக்கமடைந்துள்ளது. சேலம் மாவட்டம், ஓமலூர் சுற்றுவட்டார பகுதியில் பஞ்சுகாளிப்பட்டி, செம்மாண்டப்பட்டி, ஊ.மாரமங்கலம், நமச்சிவாயனூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் பட்டு நெசவு தொழிலில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெசவாளர்கள் வேலை செய்கின்றனர். இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாக 2 மாதமாக நெசவு தொழில் முடங்கியது. அரசின் தளர்வுகளை தொடர்ந்து, தற்போது பட்டு நெசவு செய்யப்பட்டு வருகிறது. ஆனால், விற்பனைக்கு வழி இல்லாததால், சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான பட்டு சேலைகள் தேக்கமடைந்துள்ளன. இதன் காரணமாக, பட்டு நெசவாளர்கள் வருவாயின்றி தவித்து வருகின்றனர்.

மேலும், பெங்களூரு உள்ளிட்ட பகுதியில் இருந்து பட்டு நூல் வரத்தும் குறைந்துள்ளது. வேறு வழியின்றி, தற்போது கட்டிட வேலை உள்ளிட்ட கூலி வேலைக்கு நெசவாளர்கள் சென்று வருகின்றனர். இது குறித்து  முன்னாள் பட்டு நெசவு  தொழிலாளர்கள் சங்க தலைவரும், தவாக மாநில துணை பொது செயலாளருமான ஜெயமோகன் கூறுகையில்,  ‘தேக்கமடைந்துள்ள பட்டு சேலைகளை கூட்டுறவு சங்கம், காதி கிராப்ட், கோ-ஆப்டெக்ஸ் மூலம் கொள்முதல் செய்ய வேண்டும். சமூக இடைவெளியுடன் கூடிய விழாக்கள் மற்றும் திருமணங்களை அனுமதிக்க வேண்டும். ஓமலூர் வட்டாரத்தில் 10 ஆயிரம் நெசவு தொழிலாளர்கள் வேலை இழந்து வறுமையில் வாடி வருகின்றனர். எனவே, அவர்களுக்கு மாதம் 2000 ரூபாய் வீதம் அரசு நிவாரணம் வழங்கவேண்டும்,’ என்றார்.

Related Stories: