தளர்வில்லா ஊரடங்கு எதிரொலி: தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் ரூ.183 கோடிக்கு மதுபானம் விற்பனை...மதுபிரியர்கள் சாதனை..!!!

சென்னை: டாஸ்மாக் கடைகள் இன்று செயல்படாது என்பதால் நேற்று ஒரேநாளில் தமிழகம் முழுவதும் 183 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. சென்னை, திருச்சி, சேலம், கோவை என்ற மண்டல வாரியாக பிரிக்கப்பட்டு மது விற்பனையானது நேற்று ஒரேநாளில் 183 கோடி ரூபாய்க்கு நடைபெற்றுள்ளது. இன்று தமிழகம் முழுவதுமாக எந்தவித தளர்வும் இன்றி கடும் கட்டுப்பாட்டுடன் முழு ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படுவதே மதுபானங்கள் விற்பனைக்கு காரணமாக கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த மாதம் ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்டவைகள் மட்டுமின்றி அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகளும் மூடப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. முழு ஊரடங்கின் போது தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டு பொதுமக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காட்சியளித்தன. இந்நிலையில், இன்று முழு ஊரடங்கு என்பதால் அதற்கு முந்தைய நாளான சனிக்கிழமை வழக்கத்தை விட மது விற்பனை அதிகமாக நடைபெற்றுள்ளது. ஊரடங்கு நாளில் தங்களுக்கு தேவையான மதுபான வகைகளை நேற்றே மதுப்பிரியர்கள் மொத்தமாக வாங்கிச் சென்றனர்.

நேற்று ஒரு நாள் மட்டும் 183 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. கடந்த வார சனிக்கிழமை 178 கோடி ரூபாயும், அதற்கு முன்பான சனிக்கிழமை அதாவது ஜூன் மாத கடைசி சனிக்கிழமையில் 171 கோடி ரூபாய்க்கும் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், நேற்று கூடுதலாக 12 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற மது விற்பனையில் அதிகபட்சமாக  மதுரை மண்டலத்தில் 42 கோடி ரூபாய்க்கு மது விற்பனையானது நடைபெற்றுள்ளது. திருச்சி மண்டலத்தில் 41.3 கோடி ரூபாய்க்கும், சேலம் மண்டலத்தில் 40.4 கோடி ரூபாய்க்கும், கோவை மண்டலத்தில் 37.9 கோடி ரூபாய்க்கும் மதுவிற்பனை செய்யப்பட்டுள்ளது.

Related Stories: