தொடரும் கொரோனா ஊரடங்கால் பல கோடி ரூபாய் புடவைகள் தேக்கம்

கோ-ஆப்டெக்ஸ் கொள்முதல் செய்யவில்லை

கவலையில் சின்னாளபட்டி நெசவாளர்கள்

சின்னாளபட்டி: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளபட்டி, சுங்குடி சேலைகளுக்கு புகழ்பெற்ற ஊர். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுங்குடி சேலை, பட்டு சேலை, கோரா பட்டு சேலை உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்குள்ள கூட்டுறவு சங்கங்கள் மூலம் மட்டும் சுமார் 2 ஆயிரம் நெசவாளர்கள் கைத்தறி கோரா பட்டு சேலைகளை நெய்து வருகின்றனர். இவற்றை கோ ஆப்டெக்ஸ் நிர்வாகம் கொள்முதல் செய்வது வழக்கம். கொரோனா ஊரடங்கால் கோ ஆப்டெக்ஸ் நிர்வாகம் சேலைகளை கொள்முதல் செய்யவில்லை. இதனால் கூட்டுறவு சங்கங்களில் சேலைகள் தேக்கமடைந்துள்ளன.

நெசவாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் கூட்டுறவு சங்கங்கள் திணறி வருகின்றன. இதேபோல் கோரா பட்டு சேலை உற்பத்தி செய்யும் தனியார் உற்பத்தியாளர்கள் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு அனுப்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான கோரா பட்டு சேலைகள் தேங்கியுள்ளன. சுங்குடி சேலை உற்பத்தியாளர்கள் கூறுகையில், ‘‘கோடை காலத்தில் தான் சுங்குடி சேலைகளை அதிகளவில் பயன்படுத்துவர். தற்போது கொரோனா ஊரடங்கால் யாரும் வெளியே வராததால் சுங்குடி சேலைகள் தேக்கம் அடைந்துள்ளன’’ என்றனர்.

கைத்தறி கோரா பட்டு சேலை உற்பத்தியாளர்கள் கூறுகையில், ‘‘சென்னை, மதுரை, கோவை போன்ற பெரிய நகரங்களில் ஜவுளி கடைகளில் வியாபாரம் இல்லாததால் அவர்கள் எங்களிடம் கொள்முதல் செய்யவில்லை. இதனால் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான கோரா பட்டு சேலைகள் தேக்கமடைந்துள்ளன’’ என்றனர்.

சின்னாளபட்டி வட்டார கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் கூறுகையில், ‘‘கொரோனா ஊரடங்கால் கோ ஆப்டெக்ஸ் நிர்வாகம் எங்களிடம் கொள்முதல் செய்யவில்லை. இதனால், வறுமையில் வாடும்  கைத்தறி நெசவாளர்களுக்கு கூலி கொடுப்பதில் கூட சிரமம் ஏற்பட்டுள்ளது’’ என்றனர்.

கோயில் திறக்காததால் 2 ஆயிரம் பேர் வறுமை

ஆடி மாதங்களில் அம்மனுக்கு விரதம்  இருக்கும் பெண்கள் மற்றும் ஓம் சக்தி வழிபாடு செய்யும் பெண்கள் சிவப்பு,  மஞ்சள் நிறத்துடன் வேப்பிலை படம் பிரிண்ட் செய்த சுங்குடி சேலைகளை  அதிகளவில் வாங்குவது வழக்கம். இதற்காக ஆடி மாதங்களில் சுமார் 1 லட்சம்  சுங்குடி சேலைகள் தயாரிக்கப்படும். ஆனால் இம்முறை கோயில்கள் திறக்காததால்  சுங்குடி சேலை உற்பத்தி பாதிப்படைந்துள்ளது. 2 ஆயிரம் தொழிலாளர்கள் வருமானமின்றி தவித்து வருகின்றனர்.

Related Stories: