கலைஞர் ஆட்சியில் இந்து கோயில்கள் பாதுகாக்கப்பட்டன; முருகரை பழித்துப் பேசியது மிகவும் கண்டிக்கத்தக்கது...ஆர்.எஸ். பாரதி விளக்கம்..!!!

சென்னை: கருப்பர் கூட்டம் என்ற பெயரில் ஒளிபரப்பாகும் யூ-டியூப் சேனலில் கந்த சஷ்டி கவசத்தை மிகவும் கொச்சையாக பேசி வீடியோ வெளியானது. இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பாஜ மற்றும் இந்து மக்கள் கட்சி சார்பில்  சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. மத்திய குற்றப்பிரிவு போலீசார் கருப்பர் கூட்டம் யூ-டியூப் சேனல் மற்றும் அதன் வெளியீட்டாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து

முதலில் செந்தில்வாசன்(49) என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட நிகழ்ச்சி தொகுப்பாளரான சுரேந்திரன் நடராஜன் நேற்று முன்தினம்  புதுச்சேரி மாநிலம் அரியங்குப்பம் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

இதற்கிடையே, கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறாக பேசியதாக கருப்பர் கூட்டத்திற்கு பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இருப்பினும், திமுக கட்சி சார்பில் கண்டனம் தெரிவிக்கவில்லை. கருப்பர் கூட்டத்திற்கு திமுக  ஆதரவாக இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த திமுக அமைப்பு செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.எஸ். பாரதி, கந்த சஷ்டி விவகாரத்தில்  முருகரை பழித்துப் பேசியது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றார்.

தற்போது பிரச்சனைகளை திசைதிருப்பும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளதாகவும் ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டியுள்ளார். திமுக மேல் புகார் கூறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும், கறுப்பர் கூட்டம் விவகாரத்தில்  ஏற்கனவே கே.என்.நேரு அறிக்கை வெளியிட்டுள்ளார். திமுகவில் உள்ளவர்களில் 1 கோடி பேர் இந்துக்கள். கருப்பர் கூட்டம் குறித்து நாளை மறுநாள் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்க உள்ளோம். உடனடியாக நடவடிக்கை  எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவோம் என்றார்.

திமுக 5 முறை ஆட்சி செய்தபோது ஏராளமான கோயில்கள் சீரமைக்கப்பட்டன. கலைஞர் ஆட்சியில் இந்து கோயில்கள் எல்லாம் பாதுகாக்கப்பட்டன. திருவாரூர் தேரை ஓட வைத்தவர் கலைஞர் கபாலீஸ்வரர் கோயில் குளம் தூர்வாரப்பட்டதும்  கலைஞர் ஆட்சியில்தான் என்றார்.

Related Stories: