கொரோனா பாதிப்பு ஐநாவில் சீர்த்திருத்தம் செய்யும் சூழலை உருவாக்கி இருக்கிறது: பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: ‘‘இரண்டாம் உலகப் போரின் பாதிப்பால் உதயமான ஐக்கிய நாடுகள் சபை, இன்று கொரோனாவின் பாதிப்பால் அதன் சீர்திருத்தத்திற்கான சூழலை ஏற்படுத்தி உள்ளது’’ என ஐநா உயர்மட்ட குழு கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். ஐ.நா. சபையின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலின் உயர்மட்ட குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி பங்கேற்று பேசியதாவது: ஐக்கிய நாடுகள் சபை, 193 உறுப்பு நாடுகளையும் ஒன்றிணைக்கிறது. அதன் உறுப்பினருடன் சேர்ந்து அமைப்பின் எதிர்பார்ப்புகளும் வளர்ந்துள்ளன. ஆரம்பத்தில் இருந்தே, ஐ.நா மற்றும் பொருளாதார சமூக கவுன்சிலின் அபிவிருத்தி பணிகளை இந்தியா தீவிரமாக ஆதரவளித்துள்ளது.

பன்முகத்தன்மை மூலம் மட்டுமே நிலையான, அமைதியான  செழிப்பை அடைய முடியும் என இந்தியா உறுதியாக நம்புகிறது. இருப்பினும், சமகால உலகின் யதார்த்தத்தை பன்முகத்தன்மை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும். இரண்டாம் உலகப் போரின் பாதிப்பால் உதயமான ஐக்கிய நாடுகள் சபை, இன்று கொரோனாவின் பாதிப்பால் அதன் சீர்திருத்தத்திற்கான சூழலை ஏற்படுத்தி உள்ளது. இந்த வாய்ப்பை நாம் இழக்கக் கூடாது.கொரோனா நோய் தொற்று அனைத்து நாடுகளையும் பின்னுக்கு தள்ளி உள்ளது.

பூகம்பங்கள், சூறாவளிகள், எபோலா நெருக்கடி அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட நெருக்கடி என எதுவாக இருந்தாலும், இந்தியா வேகத்துடனும் ஒற்றுமையுடனும் பதிலளித்துள்ளது. அதே போல கொரோனாவுக்கு எதிராகவும் நாங்கள் 150க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மருத்துவ மற்றும் பிற உதவிகளை வழங்கியுள்ளோம்.

கொரோனாவுக்கு எதிரான போரை அரசாங்கமும் பொது சமூகமும் இணைந்து முயற்சிகளை மேற்கொள்வதன் மூலம், இதை நாங்கள் ஒரு மக்கள் இயக்கமாக மாற்றி உள்ளோம். இந்தியாவின் ஆணிவேரான சிறந்த மருத்துவ கட்டமைப்புகள் இன்று உலகிலேயே அதிக குணமடைவோர் விகிதத்தை எட்ட உதவி இருக்கிறது.

உலகளாவிய நல்லிணக்கத்தைப் பேணுவதற்கும், சமூக-பொருளாதார சமத்துவத்தை மேம்படுத்துவதற்கும், இயற்கையின் சமநிலையைப் பாதுகாப்பதற்கும் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன், ஐ.நா.வின் முயற்சிகளுக்கு முழு ஆதரவளிப்பதில் இந்தியா தனது பங்களிப்பை தொடர்ந்து வழங்கும். கொரோனாவால் தற்போது கிடைத்துள்ள புதிய இந்த வாய்ப்பையும் நாங்கள் இழக்க மாட்டோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Related Stories: