கேரளா மாநிலத்தில் நடந்த தங்க கடத்தல் விவகாரம்: வரும் ஜூலை 31ம் தேதி வரை போராட்டம் நடத்த கேரள உயர்நீதிமன்றம் அதிரடியாகத் தடை விதித்து உத்தரவு..!!

திருவனந்தபுரம்: கேரளா மாநிலத்தில் நடந்த தங்கக் கட்டி கடத்தல் விவகாரம் பெரும் ஆச்சிரியத்தை ஏற்படுத்திய நிலையில், ஊரடங்கு முடியும் வரை அரசியல் கட்சிகள் பேரணி, போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த, கேரள உயர் நீதிமன்றம் அதிரடியாகத் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவத் துவங்கியுள்ளது. இதுவரை, 9,500 பேருக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 35 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தற்போது கேரளாவை தங்கக் கடத்தல் வழக்கு உலுக்கிவருகிறது.

இது தொடர்பாக மாநில அரசுக்கு எதிராக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சியினர் பல்வேறு இடங்களில் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் செல்வதும், போராட்டத்தில் ஈடுபடுவதுமாக உள்ளனர். இதற்கு தடை கோரி, வழக்கறிஞர் ஒருவர் கேரள உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், ஷாஜி பி சாலே ஆகியோர் முன் விசாரிக்கப்பட்டது. தேசிய பேரிடர் மேலாண்மே ஆணையம் கடந்த மாதம் 29ம் தேதி அறிவித்த வழிகாட்டலின்படி, பொது மக்கள் கூட்டமாகக் கூடுவதை அனுமதிக்க முடியாது.

மேலும், அரசியல் கட்சிகள் போராட்டம், பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், பேரணி ஆகியவை நடத்துவதும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் விதிமுறைகளை மீறுவதாகும். ஊரடங்கு முடியும் வரை அதாவது வரும் 31ம் தேதி வரை அரசியல் கட்சிகள், அமைப்புகள் போராட்டம், பேரணி நடத்தத் தடை விதிக்கப்படுகிறது என, நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனால் ஆளும் கட்சியினர் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.

Related Stories: