திருச்சி மணப்பாறை காகித ஆலையில் இளைஞர் உயிரிழப்பு: பொதுமக்கள் ஆலையை முற்றுகையிட்டு போராட்டம்!!!

திருச்சி:  திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இயங்கக்கூடிய காகித ஆலையில் பணியாற்றிய ஊழியர் உயிரிழந்ததை தொடர்ந்து, பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  திருச்சி மணப்பாறை முண்டிபட்டியில் தமிழக 2வது காகித ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் நாளொன்றுக்கு சுமார் 1500க்கும் மேற்பட்டோர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், குள்ளம்பட்டியை சேர்ந்த கலைச்செல்வன் என்ற வாலிபர் ட்ராக்ட்டர் ஓட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

காகித ஆலைக்கு பயன்படும் வகையில் தண்ணீரானது அருகிலுள்ள குளத்தில் சேமிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குளத்தின் அருகே நேற்று கலைச்செல்வன் பணியில் ஈடுபட்டுள்ளார். பின்னர் இரவு வேலை முடிந்ததும் அனைவரும் வீட்டிற்கு செல்ல முற்பட்டுள்ளனர். அப்போது வெகுநேரமாகியும் கலைச்செல்வன் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த சக ஊழியர்கள் வாலிபரை தேடியுள்ளனர். இதனைத்தொடர்ந்து, நிர்வாகத்தின் சார்பில் மீட்பு குழுவினருக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தகவலறிந்து மீட்பு குழுவினரும் அங்கு விரைந்து வந்தனர். பின்னர், கலைச்செல்வன் பணியில் ஈடுபட்ட அந்த குளத்திலும் அதன் சுற்றுபகுதியிலும்  தீவிரமாக தேடியுள்ளனர்.

மேலும் இரவு முழுவதும் தேடியும் வாலிபர் கிடைக்கவில்லை. இதனால் இன்று காலையும் தொடர்ந்து மீட்பு குழுவினர் பணியில் ஈடுபட்டனர். அப்போது குளத்தினுள் மிக ஆழத்தில் இருந்து கலைச்செல்வனது உடலானது சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, பெற்றோரும், உறவினர்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் காகித ஆலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இறந்த இளைஞனின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்ககோரி அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  

இழப்பீடு வழங்கவில்லை எனில் உடலை வாங்க மாட்டோம் எனவும் அவர்கள் கூறியுள்ளனர். மேலும், அவரது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு வேலை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, மணப்பாறை வட்டாச்சியர், காவல் துறையினர் மற்றும் குளித்தலை எம்.எல்.ஏ உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில், வாலிபரின் உடலை பெற்று பிரேத பரிசோதைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இளம் வாலிபன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: