திருப்புவனத்தில் தடையை மீறி நடந்தது ஆட்டுச்சந்தை: சமூக இடைவெளியின்றி திரண்ட மக்களால் கொரோனா பரவும் அபாயம்

திருப்புவனம்: திருப்புவனத்தில் நேற்று தடையை மீறி ஆட்டுச்சந்தை நடைபெற்றது. இதில் சமூக இடைவெளியின்றி வியாபாரிகள், மக்கள் திரண்டதால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை கால்நடை சந்தை, காய்கறி சந்தை நடைபெறும். சந்தைக்கு மதுரை, மானாமதுரை, சிவகங்கை, மேலூர், அருப்புக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பெருமளவு வியாபாரிகள் வருவர். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் திருப்புவனம் சந்தை ரத்து செய்யப்பட்டுள்ளது.  ஆண்டுதோறும் ஆடி பிறப்பை முன்னிட்டு திருப்புவனத்தில் ஆடு, மாடு, கோழிகள் விற்பனை களை கட்டும். பெரும்பாலும் மதுரையில் இருந்தே அதிகளவு வியாபாரிகள் வருகை தருவர். ஒரே நாளில் 2 ஆயிரம் முதல் 5 ஆயிரம் ஆடுகள் வரை விற்பனையாகும்.

இந்த ஆண்டு ஆடி மாதம் வரும் வெள்ளிக்கிழமை பிறக்கிறது. ஆடி விற்பனையை குறி வைத்து, திருப்புவனத்தில்  தடையை மீறி நேற்று சந்தை நடைபெற்றது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. வியாபாரிகள், பொதுமக்கள் பெருமளவில் குவிந்தனர். இவர்கள் மாஸ்க் அணியாமலும், எவ்வித சமூக இடைவெளியையும் பின்பற்றாமல் திரண்டனர். இதனால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தடையை மீறி சந்தை நடைபெற்றும், அதிகாரிகள் தடுக்க முன்வராதது சமூக ஆர்வலர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Related Stories: