குடிமராமத்து பெயரில் மண், மரங்கள் வெட்டி கடத்தல்: கண்காணிப்பு குழு அமைக்க கோரிக்கை

காரைக்குடி:  சிவகங்கை மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 540 கண்மாய்களும், சிறிய மற்றும் பெரிய அளவில் ஒன்றிய கண்மாய்கள் 10 ஆயிரத்துக்கு மேற்பட்டவை உள்ளன. ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 867 எக்டேருக்கு மேல் பாசனபரப்பாக உள்ளது. கண்மாய்களே மாவட்டத்தின் முக்கிய நீராதாரம்.  மழை பெய்தும் முறையாக தூர்வாராதது, வரத்து கால்வாய்களை பராமரிக்காததால் தண்ணீர் தேக்க முடியாத நிலை உருவாகி வந்தது. இதனால் பலர் விவசாயத்தை கைவிட்டனர். இதனால் விவசாய நிலங்கள் தரிசாக போடப்பட்டன.

நீர்நிலைகளை பாதுகாத்தால் தான் மாவட்டம் வளம் பெறும் என்ற அடிப்படையில் தூர்வாரப்படாமல் கிடக்கும் நீர்நிலைகளை மேம்படுத்துவதற்கு என மாவட்ட நிர்வாகத்தின் முயற்சியால் 20 மண் அள்ளும் இயந்திரங்கள் வாங்கப்பட்டு இப்பணிக்கு என பயன்படுத்தப்பட்டு வருகிறது. குடிமராமத்து பணியின் மூலம் வரத்து கால்வாய்கள், கண்மாய்கள் தூர்வாரப்பட்டதால்  தரிசாக கிடந்த ஒன்றரை லட்சம் ஏக்கர் நிலம் கூடுதலாக  விவசாய நிலமாக மாற்றப்பட்டு நெல் உள்பட பல்வேறு பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. ஆனால் இதற்கு பின்னடைவு ஏற்படுத்தும் வகையில் ஒருசில பகுதிகளில் கண்மாய்களில் அதிக ஆழத்திற்கு மண் எடுத்து கடத்தி விற்பனை செய்வது, கண்மாய் இல்லாத பகுதிகளிலும் மண் எடுப்பது போன்றவை தொடர்கிறது.

அதேபோல் கண்மாய் வரத்து கால்வாய்கள் மற்றும் ஓரங்களில் உள்ள 20 முதல் 30 ஆண்டுகள் பழமையாக மரங்களை வெட்டி கடத்தி வருகின்றனர் என்ற புகார் தொடர்ந்து எழுந்து வருகிறது. இந்நிலையில் காரைக்குடி அருகே துலாவூர் பகுதியில் குடிமராமத்து பெயரில் பழமையான மரங்கள் வெட்டப் பட்டுள்ளதாக கிராமமக்கள் ஒருதரப்பினர் புகர் தெரிவித்துள்ளனர். இதற்கு என கண்காணிப்பு குழு அமைத்து கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. திருப்பத்தூர் தாசிந்தார் ஜெயலட்சுமி கூறுகையில், துலாவூர் கண்மாயில் மரங்கள் வெட்டுவதாக புகார் வந்துள்ளது. அப்பகுதி வருவாய் ஆய்வாளரை கொண்டு ஆய்வு செய்து மரங்கள் வெட்டப்பட்டு இருந்தால் அபாரதம் விதிக்கப்படும் என்றார்.

Related Stories: