ரூ.6 கோடியில் பழமை மாறாமல் பழநி மலைக்கோயிலில் கும்பாபிஷேக பணிகள்: செயல் அலுவலர் தகவல்

பழநி: பழநி மலைக்கோயிலில் ரூ.6 கோடியில் பழமை மாறாமல் கும்பாபிஷேக பணிகள் நடந்து வருவதாக, செயல் அலுவலர் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம், பழநியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயிலில், கடந்த 2006ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதன்பின் 2018ல் நடக்க வேண்டிய கும்பாபிஷேகம் நீதிமன்ற ஒப்புதல் உள்ளிட்ட காரணங்களால் நடக்கவில்லை. பல்வேறு தரப்பினரின் கோரிக்கையின்பேரில், கும்பாபிஷேகத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இப்பணிக்காக கடந்த டிசம்பரில் பாலாலயம் நடத்தப்பட்டது. இதையடுத்து, 18 வகையான பணிகளுக்கு முதற்கட்டமாக சுமார் ரூ.6 கோடியில் டெண்டர் விடப்பட்டது.

இதைத்தொடர்ந்து கோயிலில் ராஜகோபுரம் மற்றும் பரிவார தெய்வங்களின் சன்னதிகளில் உள்ள கோபுரங்கள் சீரமைப்பு, கட்டிடங்கள் புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன. பணிகளை பார்வையிட்ட கோயில் செயல் அலுவலர் ஜெயசந்தரபானு ரெட்டி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: பழநி மலைக்கோயிலில் உள்ள கோபுரங்கள் சுதைகளால் ஆனவை. அவைகளை பழமை மாறாமல், ஆகம விதிகளுக்கு உட்பட்டு சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. ஊரடங்கால் கடந்த 40 நாட்களாக பணிகள் நிறுத்தப்பட்டிருந்தன.

அதன்பின், உரிய பாதுகாப்பு முறைகளை பின்பற்றி பணிகளை செய்து வருகிறோம். நாயக்கர் மண்டபத்தில் சேதமடைந்த 2 தூண்கள் செப்பனிடப்பட உள்ளன. கோயில் வளாகத்தில் 171 கண்காணிப்பு காமிராக்கள், 2 எச்டி காமிராக்களும் உள்ளன. இவற்றின் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. கோயில் பணிக்கு வருபவர்களின் விபரங்கள் பதிவு செய்யப்படுகிறது. 8 மாதத்திற்குள் கும்பாபிஷேக பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குள் 2வது ரோப்கார் பணி நிறைவடைந்து விடும்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: