போலீஸ் ஸ்டேஷனில் தாய் சாவு நீதி கேட்டு விஷம் குடித்த மகள்

சேலம்: கொரோனா ஊரடங்கை மீறி கடை வைத்ததாக, கடந்த ஏப்ரல் 25ம் தேதி, அம்மாப்பேட்டையைச் சேர்ந்த எலுமிச்சம் பழ வியாபாரி வேலுமணி டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வரப்பட்டார். உடனடியாக போலீஸ் ஸ்டேசனுக்கு வந்த அவரது தாயார் பாலாமணி, மயங்கி விழுந்து உயிரிழந்தார். போலீசார், தங்களது காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வற்புறுத்தியதால், தனது தாய் உயிரிழந்ததாக வேலுமணி குற்றம்சாட்டினார். இந்நிலையில் நேற்று வேலுமணி, அவரது சகோதரி உமா மற்றும் உறவினர்களுடன் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர். நுழைவாயிலில் அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், ஒருவரை மட்டுமே அனுமதிக்க முடியும் என தெரிவித்தனர்.

இதனால் அவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, திடீரென மயங்கி விழுந்த உமா, தான் விஷம் அருந்திவிட்டதாக தெரிவித்தார். இதனையடுத்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வேலுமணி கூறுகையில், ‘‘எனது தாயார் இறப்பு பற்றி எதுவும் கேட்க வேண்டாம் என வெளியாட்கள் மூலம் போலீசார் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். எனவே, இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றார்.

Related Stories: