குமரியில் கடல் சீற்றத்தால் மீனவ கிராமங்கள் பாதிப்பு: வீடுகளில் கடல் நீர் சூழந்துள்ளதால் உடனடியாக தூண்டில் வளைவு அமைக்க மக்கள் கோரிக்கை!!!

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள ஆழிக்கால் மீனவ கிராமத்தில் கடல் அரிப்பால் 100க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதையும் நிலை உருவாகியுள்ளது. தென்மேற்கு பருவ காற்று வீசும் காலங்களில் கடல் சீற்றமானது அதிகளவு ஏற்படுகிறது. இந்த கடல் சீற்றம் தற்போது நாகர்கோவில் பகுதியில் அமைந்துள்ள ஆழிக்கால் கிராமத்தை உருக்குலைத்து வருகிறது. இதனால், கடல் நீர் புகுந்ததால் அப்பகுதியில் வசித்து வந்த குடியிருப்புகளில் பலர் பாதுகாப்பான இடத்திற்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

இந்நிலையில், கடல் சீற்றத்தின் போது கடலோரம் உள்ள 100க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்து விடுவதால் அங்குள்ள மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி இருக்கின்றனர். மேலும் கடல் நீருடன் வெளியேறும் மணல், கிராமம் முழுவதும் மலை போல குவியலாக சேர்ந்துள்ளன. இதனைத்தொடர்ந்து, மணல் குவியல்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் நூற்றுக்கணக்கான வீடுகள் மண்ணில் புதைந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது. குடியிருப்புகளில் குவிந்து கிடைக்கும் மணல் மேடுகளை அகற்ற பலமுறை கோரிக்கை விடுத்தும், மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். கொஞ்சம் கொஞ்சமாக மண்ணில் புதையும் ஆழிக்கால் கிராமத்தை மீட்க போர்க்கால அடிப்படையில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்றும் மீனவ மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: