மாநில அரசுக்கு இல்லை; திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலை நிர்வகிக்க அரச குடும்பத்திற்கு மட்டுமே உரிமை; உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

டெல்லி: திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோயிலுக்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். இது மிகவும் புராதன கோயில். இந்த அளவிற்கு புராதனமான இக்கோயிலில் 6 பாதாள அறைகள் இருப்பதாகவும், அவற்றில் சில அறைகளில் விலைமதிப்பற்ற பொக்கிஷங்கள் இருப்பதாகவும் கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் தான் பத்மநாபசுவாமி கோயிலின் மிக அருகே வசித்து வரும் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சுந்தரராஜன் என்ற வக்கீல் உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.

பத்மநாபசுவாமி கோயிலிலுள்ள 6 ரகசிய அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள அரிய பொக்கிஷங்களை கோயில் ஊழியர்கள் உட்பட பலர் திருடி வருவதாகவும், பொக்கிஷங்களை பாதுகாக்க ரகசிய அறைகளை திறந்து ஆய்வு நடத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். சுந்தரராஜனின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த 2011ம் ஆண்டு பத்மநாபசுவாமி கோயிலிலுள்ள 6 ரகசிய அறைகளையும் திறந்து பொக்கிஷங்களை கணக்கிட ஒரு குழுவை அமைத்து உத்தரவிட்டது. இதற்கிடையே பத்மநாபசுவாமி கோயிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் ரகசிய அறைகளை திறக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், திறக்கப்பட்ட 5 அறைகளிலும் கண்டுபிடிக்கப்பட்ட பொக்கிஷங்களை பரிசோதிக்க உத்தரவிட்டது.

இதற்கிடையே, கேரளாவில் திருவனந்தபுரத்தில் இருக்கும் புகழ்பெற்ற பத்மநாபசுவாமி கோயில் நிர்வாகத்தை மாநில அரசே எடுத்து நடத்திக் கொள்ளலாம் என்று 2011ல் அந்த மாநிலத்தின் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தது. இதை எதிர்த்து திருவிதாங்கூர் மன்னர் குடும்பம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த வழக்கில், விசாரணைகள் முடிந்த நிலையில் ஏப்ரல் 10-ம் தேதி தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இந்து மல்ஹோத்ரா, யு.யு.லலித் ஆகியோர் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கில், நீதிபதிகள் யு.யு.லலித், இந்து மல்கோத்ரா அமர்வு தீர்பளித்தனர். அப்போது, திருவனந்தபுரத்தில் இருக்கும் புகழ்பெற்ற பத்மநாபசுவாமி கோயிலை நிர்வகிக்க அரச குடும்பத்திற்கு மட்டுமே உரிமை உள்ளது என்று தீர்ப்பளித்தனர். மேலும், இடைக்காலமாக மாவட்ட நீதிபதி தலைமையில் நிர்வாக குழு அமைக்கவும் அனுமதி வழங்கியுள்ளது. நிர்வாக குழுவில் அனைத்து உறுப்பினர்களும் இந்துகளாக இருக்க வேண்டும். பொக்கிஷங்கள் உள்ள 6-வது அறையை திறப்பது தொடர்பாக நிர்வாக குழு முடிவு செய்யும் என்றும் தெரிவித்துள்ளனர். கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: