சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு; ஜெயராஜ்-பென்னிக்ஸ் வீட்டில் சிபிஐ தீவிர விசாரணை...10 பேரையும் காவலில் எடுக்க இன்று மனுதாக்கல் என தகவல்

சாத்தான்குளம்: சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் ஜெயராஜ்-பென்னிக்ஸ் வீட்டில் சிபிஐ விசாரணையை தொடங்கியுள்ளது.

சாத்தான்குளம் வழக்கு:

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் செல்போன் கடை வைத்திருந்த தந்தை- மகனுமான ஜெயராஜ் (வயது 58), பென்னிக்ஸ் (31)  ஆகியோர் ஊரடங்கு காலத்தில், கடையை அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கும் மேலாக திறந்து வைத்திருந்த   குற்றச்சாட்டில், கடந்த மாதம் 19ம் தேதி இரவு கைது செய்யப்பட்டனர். பின்னர், சாத்தான்குளம் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட  நிலையில், இருவரும் அங்கு கடுமையாக தாக்கி சித்ரவதை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.

ஜூன் 20ம் தேதி அதிகாலை சாத்தான்குளம் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தநிலையில், 22ம் தேதி பென்னிக்சும், 23ம் தேதி ஜெயராஜூம் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் சாத்தான்குளம் மட்டுமல்லாது, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிபிசிஐடி விசாரணை:

இந்த வழக்கை தாமாக முன்வந்து உயர்நீதிமன்ற மதுரை கிளை விசாரித்து வருகிறது. இதற்கிடையே, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இருப்பினும், கொலை வழக்கு பதிவு செய்ய   முகாந்திரம் இருப்பதாகவும், சி.பி.ஐ. இந்த வழக்கை கையில் எடுக்கும் வரை, சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த ஐகோர்ட்டு மதுரைக் கிளை அதிரடியாக உத்தரவிட்டது.

10 காவலர்கள் கைது:

ஐகோர்ட்டு மதுரைக் கிளை உத்தரவின்படி, விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி, சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், தலைமை காவலர் உள்ளிட்ட 5 காவலர்களை அதிரடியாக கைது   செய்து சிறையில் அடைத்தது. மேலும், சாத்தான்குளத்தில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, காவலர்கள் செல்லத்துரை, சாமத்துரை, தாமஸ் உள்ளிட்ட 5 பேர் கைது செய்து சிறையில் அடைந்துள்ளனர்.

சிபிஐ வசம் வழக்கு:

இதற்கிடையில், இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரிந்துரைத்திருந்தார். இதை ஏற்று, இதற்கான அறிவிக்கையை மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்டது. இதனையடுத்து,  சாத்தான்குளம்  தந்தை-மகன் கொலை வழக்கு சிபிசிஐடியிடம் இருந்து சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. தமிழக சிபிஐ அதிகாரிகள் அல்லாமல் டெல்லி சிபிஐ புலனாய்வு 2-ம் பிரிவு  அதிகாரிகள் நேரடியாக விசாரணையை தொடங்கினர். தொடர்ந்து,  வழக்கு தொடர்பாக முதல் தகவல் அறிக்கையை சிபிஐ கடந்த 8-ம் தேதி பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

ஜெயராஜ்-பென்னிக்ஸ் வீட்டில் சிபிஐ விசாரணை;

இந்நிலையில், ஜெயராஜ்-பென்னிக்ஸ் வீட்டில் சிபிஐ விசாரணையை தொடங்கியுள்ளது. சிபிஐ கூடுதல் டிஎஸ்பி விஜயகுமார் சுக்லா தலைமையில் அதிகாரிகள் ஜெயராஜ்-பென்னிக்ஸ் உறவினர்கள், அண்டை வீட்டாரிடம் தீவிரமாக விசாரணை  நடத்தி வருகின்றனர். சாத்தான்குளத்தில் பென்னிக்ஸ் நடத்தி வந்த செல்போன் கடையிலும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நீதிமன்றத்தில்  உடைகள் ஒப்படைப்பு;

இதற்கிடையே, தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இருந்து ஜெயராஜ்- பென்னிக்ஸ் உடைகள் மதுரை வந்தன. இருவரின் 3 கைலிகள் 7 உள்ளாடைகள், போலீசின் 5 லத்திகள் மதுரை முதன்மை நீதிமன்றத்தில்  ஒப்படைக்கப்பட்டது. சிசிடிவி காட்சிகள், அவை அடங்கிய ஹார்டு டிஸ்க் ஆகியனவும் ஒப்படைக்கப்பட்டன. இதனையடுத்து, வழக்கில் தொடர்புடைய 10 பேரையும் காவலில் விசாரிக்க அனுமதி கோரி இன்று மதுரை மாவட்ட முதன்மை  நீதிமன்றத்தில் சிபிஐ மனுத்தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: