கொடிசியா கொரோனா மையத்தில் டாக்டர் பயன்படுத்திய கவச உடையை தூக்கி சென்ற நாய்

கோவை:  கொரோனா நோயாளிகளை கையாளும் மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாத வகையில் அவர்களுக்கு பிபிடி கிட் எனப்படும் முழு உடல் கவச உடை அளிக்கப்படுகிறது. இதனை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். இல்லையென்றால், இதன் மூலமாக கொரோனா தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.  இந்நிலையில், கோவை கொடிசியாவில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா கண்காணிப்பு மையத்தின் வெளியில் டாக்டர்கள் பயன்படுத்திய பிபிடி கிட் முறையாக அப்புறப்படுத்தப்படாமல் திறந்தவெளியில் கிடந்தது. இதை அப்பகுதியில் சுற்றிதிரிந்த நாய் ஒன்று வாயில் கவ்வி தூக்கி சென்று, செடிகள் இருக்கும் பகுதியில் ஓரமாக விட்டு சென்றது.

இதன் மூலம் நாய்க்கு கொரோனா பாதிப்பு ஏற்படுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால், பிபிடி கிட் எடுத்து விளையாடிய நாயை தேடும் பணியில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர். இந்த சம்பவம் கொடிசியா பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இது குறித்து டாக்டர்கள் கூறுகையில், ‘‘தற்போது வரை நாய் போன்ற விலங்குகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக எங்கும் கண்டறியப்படவில்லை. பிபிடி கிட் பயன்படுத்திய பின் அதனை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். இல்லையென்றால் தொற்று ஏற்படும். இது அபாயகரமான செயல்’’ என்றனர்.

Related Stories: