விசாரணைக்கு அழைத்து சென்ற போது காவல் நிலையத்தில் கழுத்தறுத்து தற்கொலைக்கு முயன்ற வியாபாரி

தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டியில் ஒகேனக்கல் சாலையில் அரசு மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில், தர்மபுரி மாவட்டம் கொங்கவேம்பு கிராமத்தைச் சேர்ந்த அசோகன்(52) என்பவர் மேற்பார்வையாளராக உள்ளார். கடந்த 24ம் தேதி காலை  10 மணியளவில், கடையை திறக்க சென்ற போது, பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு திடுக்கிட்டார். இதுகுறித்த தகவலின்பேரில், அஞ்செட்டி போலீசார் விரைந்து சென்று விசாரித்தனர். நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள், கடைக்குள் புகுந்து 16 அட்டை பெட்டிகளில் வைத்திருந்த ₹1.13 லட்சம் மதிப்பிலான மது பாட்டில் பெட்டிகளை திருடிச்சென்றது தெரியவந்தது.

இந்நிலையில், மது பாட்டில்களை திருடிச்னெ–்ற மர்ம நபர்கள், போலீசுக்கு பயந்து நேற்று முன்தினம் காலை, 13 மது பெட்டிகளை கடையின் முன் வைத்து விட்டு சென்றனர். அதனை அஞ்செட்டி இன்ஸ்பெக்டர் (பொ) சாவித்திரி, எஸ்ஐ (பொ) கார்த்திகேயன் ஆகியோர் கைப்பற்றினர். இதுதொடர்பாக, டாஸ்மாக் கடை அருகே, பலகார கடை நடத்தி வரும் அஞ்செட்டி மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ஸ்ரீராமன்(48) என்பவரிடம் விசாரிக்க, போலீசார் முடிவு செய்தனர். அதன்படி, நேற்று காவல்நிலையத்திற்கு அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்து அதிர்ச்சியடைந்த ஸ்ரீராமனின் மனைவி, உறவினர்கள் சிலருடன் காவல்நிலையத்திற்கு சென்று கணவரிடம் பேச முயன்றுள்ளார்.

ஆனால், அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி, எச்சரிக்கை செய்ததாக தெரிகிறது. இதனால், அதிர்ச்சியடைந்த ஸ்ரீராமன், காவல்நிலையத்தில் டேபிள் மேல் இருந்த கத்தியை எடுத்து,  திடீரென தனது கழுத்தை அறுத்துக்கொண்டார். அதனை கண்டு திடுக்கிட்ட போலீசார், பாய்ந்து சென்று அவரிடம் இருந்த கத்தியை பறித்தனர். பின்னர், அவரை அஞ்செட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவருக்கு கழுத்து பகுதியில் 7 தையல் போடப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. இதையடுத்து, ஸ்ரீராமனை உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர், காவல்நிலையத்தில் கழுத்தறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அஞ்செட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: