மதுரை அருகே 16ம் நூற்றாண்டை சேர்ந்த சதிக்கற்கள் கண்டுபிடிப்பு

மதுரை :  மதுரை அருகே 16ம் நூற்றாண்டை சேர்ந்த 3 சதிக்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  மதுரை மாவட்டம் வே.சத்திரப்பட்டி கண்மாய் பகுதியில் கள ஆய்வு செய்தபோது மூன்று வகையான கலை நுட்பத்துடன் கூடிய சதிக்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதுகுறித்து கல்லூரி பேராசிரியரும், தொல்லியல் ஆய்வாளருமான முனீஸ்வரன் கூறியதாவது: இறந்துபோன கணவனுடன், அவன் மனைவியும் உடன்கட்டை ஏறி இறந்த பின் அவர்கள் நினைவாக எடுக்கப்படும் நினைவுக்கல் ‘சதிக்கல்’ எனப்படுகிறது.

இதில் கணவனுடன் மனைவியும் இருப்பது போன்று சிற்பம் அமைக்கப்பட்டிருக்கும். இப்பெண் சுமங்கலியாக இறந்தவள் என்பதை காட்ட கை உயர்த்தி இருப்பது போன்றும், அதில் வளையல் உள்ளிட்ட அணிகலன்கள் அணிந்தவளாகவும் காணப்படுவாள். தீயில் பாய்ந்து உயிர் விடுவது போன்ற சிற்பம் செதுக்கும் வழக்கம் இல்லை. இத்தகைய சதிக்கல் கோயில்களை மாலையீடு, மாலையடி, தீப்பாஞ்சம்மன், மாலைக்காரி, சீலைக்காரி என்றும் அழைப்பர். மாலை, சதி ஆகிய சொற்களுக்கு ‘பெண்’ என்ற பொருள் உண்டு.

உடன்கட்டை ஏறி இறந்துபோன பெண்களை அக்காலத்தில் தெய்வமாகப் போற்றி வணங்கினர். மதுரையை ஆட்சி செய்த நாயக்கர்களுக்கு கட்டப்பட்டு பல குறுநில மன்னர்கள் ஆட்சி புரிந்தனர். இந்த குறுநில மன்னரின் ஆட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் சதி எனும் உடன்கட்டை ஏறும் பழக்கம் காணப்பட்டது. மதுரை மாவட்டம், வே.சத்திரப்பட்டி கண்மாய் முகத்துவாரப் பகுதியில் மூன்றரை அடி உயரமும், இரண்டரை அடி அகலமும் கொண்ட இரு கற்களும், இரண்டரை அடி உயரமும், ஒன்றரை அடி அகலமும் கொண்ட ஒரு கல் என 3 சதிக்கற்கள் கண்டறியப்பட்டுள்ளன.

 இதில் ஒரு கல்லில் ஒருவர் அமர்ந்த நிலையில் கையில் முப்பட்டை வாளை ஏந்தி, மார்பில் பூணூல் அணிந்து காட்சியளிக்கிறார். அருகிலுள்ள அவர் மனைவி கொண்டை, நீண்ட காதுகள், கழுத்தில் அணிகலன்களுடன் தலை சாய்ந்து காணப்படுகிறார். ஆண், பெண் இருவரும் வலது கால்களை மடக்கி இடது கால்களை தொங்கவிட்டும், தலை, காது, கழுத்து, கை, கால்கள், இடுப்பு ஆகிய இடங்களில் அணிகலன்களுடன் உள்ளனர்.  சிற்பத்தின் அடிப்பகுதியில் பெண்ணின் காலடியை ஒருவர் தலையில் தாங்குவதையும், பறவை, மணி ஆகியவற்றையும் கலைநயத்தோடு அமைத்துள்ளனர்.

 மற்றொரு சிற்பத்தில் ஒரு பெண் கைகளை உயர்த்தியுள்ளார். ஆண் வலது கையிலுள்ள வாளை கீழே ஊன்றி,  இடது கையை குழந்தையின் தலையில் வைத்துள்ளார். தலையில் கொண்டை, முறுக்கு மீசை, காதில் வளையங்கள், கழுத்தில் அணிகலன்கள், இடுப்பில் கத்தி, ஆகியவற்றுடன் காணப்படுகிறார். இடப்புறம் உள்ள பெண் தலை சாய்த்து வலது கையில் எலுமிச்சையும், இடது கையில் கண்ணாடியும் ஏந்தி இருக்கிறார்.

 அடுத்த சிற்பத்தில் மூவரும் நின்ற நிலையில் உள்ளனர். ஆண் தலையில் கிரீடத்துடனும், அணிகலன்களுடனும், இருபுறமும் உள்ள பெண்கள் கையை ஏந்தியும் உள்ளனர். மேலே வெண் கொற்றக்குடை உள்ளது. சிற்பங்களில் கல்வெட்டு ஏதுமில்லை. இச்சிற்பங்கள் நாயக்கர் ஆட்சியின் தொடக்கக்காலமான கி.பி.16ம் நூற்றாண்டாக இருக்கலாம். தற்போது பாட்டையா சாமிகள் என சிலர் வருடத்துக்கு ஒருமுறை படையலிட்டு இவற்றை வழிபட்டும் வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: