ஹைவேவிஸ் மலைக்கிராம தேயிலைத் தோட்டங்களில் குட்டிகளுடன் யானை உலா: மக்கள் அச்சம்

சின்னமனூர்:  சின்னமனூர் அருகே, ஹைவேவிஸ் மலைப்பகுதியில் உள்ள இரவங்கலாறு தேயிலை தோட்டங்களில் குட்டியுடன் உலா வரும் யானைகளால் குடியிருப்புவாசிகள் அச்சத்தில் உள்ளனர். தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் ஹைவேவிஸ் பேரூராட்சி உள்ளது. இந்த பேரூராட்சியில் மேகமலை, மணலாறு, மேல்மணலாறு, மகாராஜா மெட்டு இரவங்கலாறு உள்ளிட்ட 7 மலை கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் தேயிலை, ஏலம், மிளகு, காபி ஆகியவை சாகுபடி செய்யப்படுகிறது. இங்குள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் யானைகள், சிறுத்தைப் புலிகள், காட்டுமாடுகள், சிங்கவால் குரங்குகள், அரியவகை மலைப்பாம்பு மற்றும் பறவையினங்கள் உள்ளன.

 கடந்த சில நாட்களாக ஹைவேவிஸ் பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது. குளுகுளு சீதோஷ்ண நிலை நிலவுகிறது. இதனால், இரவங்கலாறு, மகராஜன்மெட்டு, வெண்ணியாறு பகுதியில் உள்ள தேயிலை தோட்ட பகுதிகளில் யானைகள் உலா வருகின்றன. இதனால், தொழிலாளர்கள் தேயிலை கொழுந்துகளை பறிக்கச் செல்ல தயங்குகின்றனர். குடியிருப்பு பகுதியில் குட்டிகளுடன் யானைகள் விளையாடுவதால் பொதுமக்களும் அச்சத்தில் உள்ளனர். இரவங்கலாறு பகுதிக்கு வரும் யானைக் கூட்டங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: