சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது சிபிஐ..!!

சாத்தான்குளம்: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக முதல் தகவல் அறிக்கையை சிபிஐ பதிவு செய்துள்ளது. சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில் முதல் தகவல் அறிக்கையை தற்போது சிபிஐ பதிவு செய்துள்ளது. சாத்தான்குளம் வியாபாரிகளான தந்தை, மகன் கொலை வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுவதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். கொலை வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் இருப்பதாகவும், சி.பி.ஐ. இந்த வழக்கை கையில் எடுக்கும் வரை, சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த ஐகோர்ட்டு மதுரைக் கிளை அதிரடியாக உத்தரவிட்டது.

அதன்படி, நெல்லை சிபிசிஐடிடி எஸ்.பி. அனில்குமார் உடனடியாக விசாரணையை தொடங்கினார்.  விசாரணையை தொடர்ந்து சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி காவல் ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், சாத்தான்குளம் வழக்கு தொடர்பாக மேலும் 5 காவலர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக விசாரணையை துவங்க சிபிஐ, குழு ஒன்றையும் அமைத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.  இன்னும், சில தினங்களில் சிபிஐ குழு சாத்தான்குளம் வந்து விசாரணையை துவங்கும் எனக் கூறப்படுகிறது.  சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்ததை தொடர்ந்து, வழக்கு விவரங்களை சி.பி.சி.ஐ.டி. ஒப்படைக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories: