திருச்சி சிறுமி மரணம்; குற்றவாளி தப்பிக்க முடியாது....! விசாரணையில் எவ்வித அரசியல் தலையீடும் இல்லை; டிஐஜி விஜயா பேட்டி

திருச்சி; திருச்சி அருகே உடல் கருகிய நிலையில் சிறுமியின் சடலம் மீட்கப்பட்ட வழக்கு விசாரணையில் எவ்வித அரசியல் தலையீடும் இல்லை. குற்றவாளி தப்பிக்க முடியாது. நிச்சயம் தண்டனை கிடைத்தே தீரும் என்று டிஐஜி ஆனி விஜயா தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகேயுள்ள அதவத்தூர் பாளையம் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த சிறுமி அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து முடித்துவிட்டு 10-ம் வகுப்பில் சேர்வதற்காகக் காத்திருந்தார். நேற்று முன்தினம் மாலை அதே பகுதியிலுள்ள, ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் உடல் கருகிய நிலையில் அச்சிறுமி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். தகவலறிந்த ஐ.ஜி எச்.எம் ஜெயராம், டிஐஜி ஆனி விஜயா, எஸ்.பி. ஜியாவுல்ஹக் உள்ளிட்டோர் அங்கு சென்று பார்வையிட்டனர்.

பின்னர் சிறுமியின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மரணத்துக்கான காரணம் குறித்து 11 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது; சிறுமியின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தியதில் அவர், பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை எனவும், தீக்காயத்தின் காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அவருக்குத் தீக்காயம் எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவராக தீயை வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாரேனும் தீ வைத்துக் கொளுத்திக் கொலை செய்தனரா என விசாரணை நடத்தி வருகிறோம்.

சிறுமியின் பின்தலையில் ஒரு இடத்தில் காயம் இருந்ததாகத் தெரியவந்துள்ளது. அதுகுறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம். 3 மருத்துவர்கள் கொண்ட குழுவினர் பிரேதப் பரிசோதனை செய்துள்ளனர். அவர்களின் அறிக்கைக்காகக் காத்துக் கொண்டிருக்கிறோம். அறிக்கை கிடைத்த பிறகே முழுமையான விவரங்கள் தெரியவரும். இது கொலையாகவும் இருக்கலாம். தற்கொலையாகவும் இருக்கலாம். இரண்டுக்குமே 50-50 சதவீத வாய்ப்புகள் உள்ளன. எதுவாக இருந்தாலும் குற்றவாளி தப்பிக்க முடியாது. நிச்சயம் தண்டனை கிடைத்தே தீரும். உடல் கிடந்த இடத்தில்தான் தீயிடப்பட்டதா என்பதையும் தெளிவாகக் கூற முடியாத நிலை உள்ளது. தடய அறிவியல் நிபுணர்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சிறுமிக்கு வேறு ஏதேனும் பிரச்சினை உள்ளதா, மன அழுத்தம் இருந்ததா என பெற்றோரிடமும், உறவினரிடமும், ஊர்க்காரர்களிடமும் விசாரணை நடத்தி வருகிறோம். இச்சிறுமியுடன் 2, 3 இளைஞர்கள் நன்றாகப் பழகி வந்துள்ளனர். அவர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். காதல் விவகாரம் காரணமா என இப்போது கூற முடியாது. தடயங்கள், ஆதாரங்களின் அடிப்படையில்தான் முடிவெடுக்க முடியும். எங்களது விசாரணை ஒளிவுமறைவின்றி உள்ளது. எவ்வித அரசியல் தலையீடும் இல்லை. திருச்சி சரகத்தில், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க அனைத்துப் பகுதிகளிலும் குழந்தைகள் குழுக்களை உருவாக்கி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இவ்வாறு டிஐஜி ஆனி விஜயா தெரிவித்துள்ளார்.

Related Stories: