புதுக்கோட்டையில் அரசின் காப்பீடு திட்டத்திற்கு விண்ணப்பிக்க குவிந்த மக்கள் கூட்டம்: சமூக இடைவெளி இல்லாததால் கொரோனா பரவும் அபாயம்!!!

புதுக்கோட்டை:  புதுக்கோட்டையில் அரசின் மருத்துவ காப்பீடு திட்டத்திற்கு விண்ணப்பிக்க மக்கள் கூட்டம் அலைமோதியதால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வைத்தூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில், தனியார் இ-சேவை மையம் மூலமாக பிரதம மந்திரி காப்பீடு திட்டம் மற்றும் முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ், விண்ணப்பிக்க மக்கள் கூடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதாவது, மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் பழைய அட்டைகளை புதுப்பிக்கும் பணி மற்றும் புதிய காப்பீடு அட்டைகளை வழங்குதல் உள்ளிட்டவைகளுக்காக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்கள் நடத்துவதற்கு மாவட்ட அதிகாரிகளிடம் முறையாக அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், தனியார் இ-சேவை மையம் மூலமாக இந்த முகாம்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதனைத்தொடர்ந்து, 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒரே நேரத்தில் கூடி தங்களது அட்டைகளை புதுப்பிக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதனால், மக்கள் அதிகளவு கூடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தகவலறிந்து அங்கு வந்த அரசு அதிகாரிகள், அனுமதிபெறாத நிலையில், எதற்காக? முகாம்கள் அமைக்கப்பட்டது என கேள்வியெழுப்பியுள்ளனர். மேலும், கொரோனா உச்சத்தில் உள்ள இந்த காலகட்டத்தில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருப்பதால் தொற்று பரவும் அபாயம் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, அங்குள்ள மக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Stories: