திருச்சியில் 14 வயது சிறுமியின் மர்ம மரணம் குறித்து அதவத்தூர் முள்காட்டில் மருத்துவர்கள் ஆய்வு!!!

திருச்சி:  திருச்சி அருகே 14 வயது சிறுமி எரித்து கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, அங்கு மருத்துவ குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மாவட்டம் சோமரசன் பேட்டை அருகே உள்ள அதவத்தூர் கிராமத்தில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய 14 வயது மகள்தான் எரித்து கொல்லப்பட்டுள்ளார். அதவத்தூர் கிராமத்தில் கழிப்பிட வசதிகள் ஏதும் இல்லை. இதனால், கிராம மக்கள் அனைவரும் முள்காட்டிருக்கு சென்று வருகின்றனர்.

இந்நிலையில் 14 வயது சிறுமியும் நேற்று மதியம் 3 மணியளவில் வீட்டைவிட்டு வெளியில் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் வெகுநேரமாகியும் மகளை காணாததால், பதற்றமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அனைத்து இடங்களிலும் தேடி உள்ளனர். ஆனால் சிறுமி கிடைக்காத நிலையில், காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளனர். இந்நிலையில், சிறுமியின் உடல் எரிந்த நிலையில், முள்காட்டிலிருந்து மீட்டெடுக்கப்பட்டுள்ளது. பின்னர், பிரேத பரிசோதனைக்காக திருச்சி மகாத்மா காந்தி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். எரிந்த நிலையில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டதால், பெற்றோரும் பொதுமக்களும், பெரும் அதிர்ச்சியடைந்தனர். இதனைத்தொடர்ந்து, சிறுமி எரித்து கொல்லப்பட்டதை கண்டித்து  உறவினர்களும் , பெற்றோர்களும் விரைவில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

பின்னர், டிஐஜி ஆனி விஜயா குற்றவாளிகளை விரைவில் கண்டறிவோம் என உறுதியளித்ததன் பேரில் மக்கள் கலைந்து சென்றனர். இந்நிலையில், சிறுமி பாலியல் தொல்லையால் கொல்லப்பட்டாரா? அல்லது முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்டாரா? என காவல் துறையினர் 11 தனி படைகள் அமைத்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பின்னர், பிரேத பரிசோதனையின்போது சிறுமியின் உடல் பலாத்காரம் செய்யப்படவில்லை என 3 மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, சிறுமியின் உடல் பெற்றோரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. சிறுமியின் கொலை குறித்து விசாரணை மேற்கொண்ட போது, அதவத்தூர் கிராமத்தில் ஒரு மர ஆலை செயல்பட்டு வருகிறது. இதில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் சிறுமியின் பதிவுகள் மட்டும் தென்படவில்லை.

இதனால், போலீசாருக்கு மேலும், சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால், மரம் வெட்டும் ஊழியர்களை அழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், மர்மங்கள் நிறைந்த சிறுமியின் கொலைக்கு காரணம் என்ன? என்பதை கண்டறிய மருத்துவ குழுவினரும் தற்போது திருச்சி மாவட்டம் அதவத்தூர் கிராமத்தில் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமியின் பிரேத பரிசோதனைகள் மேற்கொண்ட மருத்துவர்களில் தலைமை மருத்துவரான கார்த்திகேயன் என்பவர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து கொண்டிருக்கிறார். பிரேத பரிசோதனையில் பலாத்காரம் செய்யபடவில்லை என கூறிய பிறகும் மருத்துவர் ஆய்வு செய்வது மேலும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: