துறையூர் காவல் நிலையத்தில் இளைஞர் தற்கொலை முயற்சி!: காவலர்கள் அடித்து உதைத்ததாக மனித உரிமைகள் ஆணையத்தில் புகார்

திருச்சி: திருச்சி மாவட்டம் துறையூரில் காவல் நிலையத்தில் தற்கொலைக்கு முயன்ற இளைஞர், காவலர்கள் அடித்து உதைத்ததாக மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளார். துறையூரில் உள்ள கொல்லப்பட்டி கிராமத்தை சேர்ந்த ரகுநாத் என்ற இளைஞரே பாதிக்கப்பட்டவராவார். கூலிப்படையுடன் தொடர்பு இருப்பதாக கூறி கடந்த மாதம் ரகுநாத்தை விசாரணைக்கு அழைத்து சென்ற துறையூர் போலீசார், காவல் நிலையத்தில் அவரை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.

இதனால் ரகுநாத் தற்கொலைக்கு முயன்றதாக மனித உரிமைகள் ஆணையம் மற்றும் காவல்துறை உயரதிகாரிகளிடம் அவர் தரப்பில் புகார் மனு அளித்துள்ளார். காவல்துறையினர் அடித்து உதைத்ததில் வலிதாங்க முடியாத ரகுநாத், காவல் நிலையத்தில் இருந்த கொசு மருந்தினை எடுத்து குடித்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். சாத்தான்குளத்தில் தந்தை, மகன் இரட்டை கொலை வழக்கை தொடர்ந்து, காவல்துறையினர் மீது அடுத்தடுத்து அத்துமீறல் புகார் எழுந்திருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுகுறித்து ரகுநாத் தனது மனுவில் தெரிவித்ததாவது, காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொள்ளாமல் தன்னை மிருகங்களை அடிப்பது போன்று அடித்து துன்புறுத்தினர். மேலும் 2 நாட்கள் காவல்நிலையத்தில் என்னை அடித்து சித்ரவதை செய்தனர். இதனால் வலிதாங்க முடியாமல் அங்கிருந்த பூச்சுமருந்தை குடித்துவிட்டேன். தொடர்ந்து என்னை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் அவர்கள் தண்ணீர் மற்றும் உப்பு நீரை வலுக்கட்டாயமாக வாயில் ஊற்றினார்கள். பெரம்பலூரை சேர்ந்த கூலிப்படையோடு தொடர்பில் இருந்ததாக சொல்லி, பொய் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தும் போது அடித்ததையும் அதனால் ஏற்பட்ட காயத்தையும் சொன்னால் நிலுவையில் உள்ள திருட்டு வழக்குகளில் குண்டர் சட்டத்தில் அடைத்துவிடுவோம் என காவலர்கள் மிரட்டல் விடுத்ததாக அவர் தெரிவித்திருந்தார்.

Related Stories: