டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை!: நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட ரூ.30 வசூல் என குடிமகன்கள் புகார்!!!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. வேடசந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான எரியோடு, வடமதுரை, அய்யலூர், கும்பூர், அழகாபுரி, பாளையம், சேலைக்காரன்பட்டி, வெள்ளோடு, டிகூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் 17 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அனைத்து வகையான மதுபாட்டில்களுக்கும் 30 ரூபாய் கூடுதலாக மது விற்பனை செய்யப்படுவதாக மதுபிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

அனைத்து டாஸ்மாக் கடைகளிலும், விலைப்பட்டியல் வைக்கப்பட வேண்டும் என்று மதுபிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதிகவிலைக்கு விற்பனை செய்யப்படும் ஊழியர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மதுபிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுகுறித்து அங்குள்ள மதுபிரியர்கள் தெரிவித்ததாவது, ஒவ்வொரு மதுபாட்டில்கள் மீதும் 30 முதல் 50 ரூபாய் வரை கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுகிறது. மதுக்கடைகளில் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னரும், பின்னரும் என இதேமுறையில் மது விற்பனை செய்யப்படுகிறது. இவை அனைத்தும் அதிகாரிகளின் பார்வைக்கு தெரிந்தே நடைபெறுகிறது. இதில் தமிழக அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Related Stories: