திருச்சியில் 14 வயது சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம்: தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை

திருச்சி: திருச்சி சிறுமி கொலை சம்பவம் குறித்து தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருந்த நாள் முதல் தற்போது வரை புதுக்கோட்டை, திருச்சு, கன்னியாகுமரி, நாமக்கல் விழுப்புரம், உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பெண் குழந்தைகள் மீதான தொடர் பாலியல் தாக்குதல் நடைபெற்றதாகவும், தொடர்ந்து 6வது முறையாக பாலியல் வன்முறை தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியுள்ளது தேசிய குழந்தைகள் ஆணையம். திருச்சி மாவட்டம் அல்லித்துறை அடுத்த அதவத்தூர் பாளையத்தை சேர்ந்தவர் பெரியசாமி(45).

இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களது 2வது மகள் கங்காதேவி(14). 9ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 10ம் வகுப்பு செல்ல இருந்தார். பெரியசாமி, நெய்தலூர் காலனி ஒத்தக்கடையில் ஹார்டுவேர்ஸ் கடை வைத்துள்ளார். வீட்டு முன் சிறிய பெட்டிக்கடை வைத்து மகேஸ்வரி வியாபாரம் செய்து வருகிறார். நேற்று மதியம் 2 மணியளவில் கடையில் இருந்த கங்காதேவியை திடீரென காணவில்லை. தேடிச்சென்ற போது, அந்த பகுதியில் முள்காட்டை ஒட்டி இருந்த மரஅறுவை மில் காம்பவுண்ட் சுவர் அருகே வேட்டியால் மூடப்பட்டு கங்காதேவி சடலமாக கிடந்தார். உடல் பாதி எரிந்த நிலையில் இருந்தது.

இதனை பார்த்த தாய் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சடலத்தை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். இன்று காலை மத்திய மண்டல ஐஜி ஜெயராம், திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா, எஸ்.பி.ஜியாவுல்ஹக் ஆகியோர் சிறுமியின் உறவினர்களிடமும் மற்றும் அப்பகுதி பொதுமக்களிடமும் விசாரணை நடத்தினர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக தேசிய குழந்தைகள் ஆணையத்தினுடைய உயர்மட்ட குழுவினருடன் ஸ்கைப் மூலம் அவசர ஆலோசனை நடைபெற உள்ளதாகவும்,

அந்த அவசர ஆலோசனை மூலமாக இந்த குழந்தைகளுக்கு உரிமையை மீட்டு தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆணையத்தின் உறுப்பினர் ஆனந்தன் தெரிவித்துள்ளார். அந்த வகையில் தொடர்ந்து 6-வது முறையாக தாமாக முன்வந்து விசாரணையை துவக்கியுள்ளது தேசிய குழந்தைகள் ஆணையம்.

Related Stories: