சீதோஷ்ண நிலை மாற்றத்தால் கம்பம் பகுதியில் பரவும் மர்மக் காய்ச்சல்: கொரோனா அறிகுறியுடன் இருப்பதால் மக்கள் கலக்கம்

கம்பம்: கம்பம் பகுதியில் சீதோஷ்ண நிலை மாற்றத்தால் பரவும் மர்மக் காய்ச்சலின் அறிகுறி, கொரோனா அறிகுறியுடன் ஒத்திருப்பதால், பொதுமக்கள் கலக்கத்தில் உள்ளனர். கேரளாவில் ஜூன் முதல் வாரம் தொடங்கி தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதன் தாக்கத்தால் தேனி மாவட்டத்தில் குளிர்ந்த காற்றும் மாலை, இரவு நேரங்களில் சாரலும் பெய்கிறது. இந்நிலையில், கம்பம் வட்டாரத்தில் உள்ள கே.கே.பட்டி, சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி மற்றும் உத்தமபாளையம் பகுதியில் பொதுமக்களுக்கு மர்மக் காய்ச்சல் பரவி வருகிறது. இக்காய்ச்சல் பாதித்தவர்களுக்க் கடுமையான உடல்வலி, மூக்கில் நீர்வடிதல், தொண்டை வலி என கொரோனா அறிகுறியுடன் ஒத்துப்போவதால் சாதாரண காய்ச்சலா? கொரோனாவா என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், ‘கம்பம் பகுதியில் பரவும் மர்மக் காய்ச்சல் கொரோனா அற்குறியுடன் ஒத்துப்போவதால், உடனடியாக ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. ‘ஸ்வாப் டெஸ்ட்’ எடுத்தால் பெரும்பாலும் நெகட்டிவ் ரிசல்ட் வருகிறது. தேனி மாவட்டத்தில் சீதோஷ்ண நிலை மாறும்போது, இதுபோன்ற வைரஸ் காய்ச்சல் பரவும். தற்போது கொரோனா தொற்று அதிகரித்து இருப்பதால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். தற்போது பரவும் மர்மக் காய்ச்சலுக்கு தொண்டை வலி, உடம்பு வலி மற்றும் ஜலதோஷம் ஆகியவை ஏற்படுகின்றன.

எனவே, பொதுமக்கள் சூடான உணவுகளை சாப்பிட வேண்டும். பழம் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்க்க வேண்டும். மது, புகையிலை பழக்கத்தை கைவிட வேண்டும்’ என்றனர். இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘கம்பம் பகுதியில் பரவும் மர்மக் காய்ச்சலை தடுக்க வீடு தோறும் மருத்துவ பரிசோதனை செய்து, தடுப்பு மருந்துகளை இலவசமாக வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: