காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் கொரோனா தொற்று நீங்க சிறப்பு யாகம்

காஞ்சிபுரம்: உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டி, காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு யாகம் நடந்து வருகிறது. உலக நாடுகள் முழுவதும் கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க, சிறப்பு யாகம் நடத்துமாறு காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர் கேட்டுக் கொண்டார். அதன்படி, கடந்த 2ம் தேதி தொடங்கி 216 நாட்கள் சிறப்பு யாகம் நடைபெறுகிறது. காலை 7.30 மணிமுதல் 11 மணிவரை 10க்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள் இந்த சிறப்பு யாகத்தை நடத்துகின்றனர். இதையொட்டி தினமும் லலித சகஸ்ரநாம பாராயணம் படிக்கப்பட்டு காமாட்சி அம்மனுக்கு தீபாராதனைகள் நடக்கின்றன. கொரோனாவை முன்னிட்டு சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படாமல், அர்ச்சகர்கள் மட்டுமே பங்கேற்று சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. இந்த சிறப்பு பூஜையில் காமாட்சி அம்மன் கோயில் ஸ்ரீகார்யம் சல்லா விஸ்வநாத சாஸ்திரி, நிர்வாக அலுவலர் நாராயணன், ஸ்தானிகர் சுரேஷ் சாஸ்திரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Stories: