கிண்ணிமங்கலத்தில் ஒரு ‘கீழடி’: 2 ஆயிரம் ஆண்டு கல்வெட்டு நாணயங்கள் கண்டெடுப்பு: அகழாய்வு செய்ய தமிழ் ஆர்வலர்கள் வலியுறுத்தல்

திருமங்கலம்: திருமங்கலம் அருகே 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டுகள், நாணயங்கள் பானை ஓடுகள் கிடைத்துள்ளன.

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கிண்ணிமங்கலம் கிராமத்தில் பள்ளிப்படை என்றழைக்கப்படும் ஏகநாதர் சுவாமி சமாதி மடம் உள்ளது. இங்கு 66க்கும் மேற்பட்ட சித்தர்கள் வாழ்ந்து ஜீவசமாதியாகி உள்ளனர். தற்போது 67வது தலைமுறையாக அருளானந்தம் மடத்தை பராமரித்து வருகிறார். இந்த சமாதியை சுற்றி 3 ஏக்கர் பரப்பளவில் சித்தர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் தற்போது கிடைத்துள்ளன. இங்கு கிடைத்த கல்வெட்டுகளில் பிராமிய எழுத்துகள் உள்ளன.

இது தவிர 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நாணயங்கள், தொரட்டியுடன் கூடிய எழுத்தாணி, பானை ஓடுகள், குடம், நாதஸ்வரம் போன்ற வாத்தியக்கருவிகள் கிடைத்துள்ளன. இதுகுறித்து கலை ஆய்வாளர்களான சென்னையை சேர்ந்த காந்திராஜன், மதுரையை சேர்ந்த ராஜவேலு, ஆனந்தன் கூறுகையில், ‘‘பண்டைய காலத்தில் இந்த மடம் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள், போர்பயிற்சிக்கூடம், மருத்துவம், சிற்பக்கலை, போர்க்கருவிகள் தயாரிப்பு உள்ளிட்ட 16 வகையான பயிற்சி அளித்த இடமாக திகழ்ந்துள்ளதாக தெரிகிறது.ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்த பயிற்சி பள்ளி மூடப்பட்டதும் தெரிய வந்துள்ளது. நாங்கள் இந்த மடத்தில் ஆய்வு செய்தபோது, 2 ஆயிரத்துக்கும் முற்பட்ட தமிழ் பிராமி எழுத்துக்களை கொண்ட கல்வெட்டும், கட்டிட இடிபாடுகளுக்குள் ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய தமிழ் வட்டெழுத்துக்கள் கொண்ட மற்றொரு கல்வெட்டையும் கண்டுபிடித்துள்ளோம். தமிழ் பிராமி எழுத்து கல்வெட்டில் ஏகன் ஆதன் கோட்டம் என எழுதப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

சங்க இலக்கியங்களில் மட்டுமே ‘கோட்டம்’ என்ற வார்த்தை அதிகளவில் வரும். அதே போல் வட்ட எழுத்தில், ‘இறையிலியாக ஏகநாதர் பள்ளிபடை மண்டலி ஈந்தார்’ என எழுதப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது. இந்த இடத்தை ஆய்வு செய்தால் நமக்கு கீழடியில் கிடைத்த தமிழர்கள் வரலாற்றை பறைச்சாற்றும் ஆதாரங்கள் கிண்ணிமங்கலத்திலும் கிடைக்கும்’’ என்றனர். மடத்தை நிர்வகித்து வரும் அருளானந்தத்திடம் கேட்டபோது, ‘‘மருத்துவத்தில் மருந்து கொடுப்பதற்கு மாட்டுக்கொம்பு அமைப்பில் வெள்ளி பூண் வடிவிலான கொம்பு, நாதஸ்வரம் போன்ற இசைக்கருவி, பள்ளிபடை சமாதியில் சமாதியானவர்களின் தலையில் வைக்கப்படும் மிகச்சிறிய சிவலிங்கம், அந்தகால தொரட்டியுடன் கூடிய எழுத்தாணி, பாண்டியர்காலத்து நாணயங்கள் இங்கு ஏற்கனவே கிடைத்துள்ளன’’ என்றார்.

Related Stories: