திம்பம் மலைப்பாதையில் சாலையோரம் படுத்திருந்த சிறுத்தை: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

சத்தியமங்கலம்: திம்பம் மலைப்பாதையில் பட்டப்பகலில் சாலையோரம் ஹாயாக படுத்திருந்த சிறுத்தையை பார்த்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, மான், கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழகம்-கர்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. நேற்று காலை திம்பம் மலைப்பாதை 27வது கொண்டை ஊசி வளைவு அருகே சாலையோரம் சிறுத்தை ரோட்டில் ஹாயாக படுத்திருந்தது.

இதைக்கண்ட வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். அவ்வழியே காரில் சென்ற ஒருவர் சிறுத்தை படுத்து இருக்கும் காட்சியை தனது செல்போனில் வீடியோ பதிவு செய்தார். ஒரு கார் சிறுத்தையின் அருகே வந்ததால் அச்சமடைந்த சிறுத்தை எழுந்து வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று வனவிலங்குகள் நடமாடும் பகுதி என்பதால் யாரும் சாலையோரம் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என வாகன ஓட்டிகளிடம் அறிவுறுத்தினர். திம்பம் மலைப்பாதையில் பட்டப்பகலில் சிறுத்தை ஹாயாக படுத்திருந்த சம்பவம் வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: