சாத்தான்குளம் வழக்கில் சாட்சியளித்த பெண் போலீசுடன் நீதிபதிகள் செல்போனில் பேச்சு: நீதிமன்றம் துணையாக இருக்கும் என உறுதி

மதுரை: சாத்தான்குளம் வழக்கில் சாட்சியம் அளித்த பெண் போலீசுடன் செல்போனில் பேசிய நீதிபதிகள், நீதிமன்றம் துணையாக இருக்கும் என உறுதியளித்தனர்.சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், இவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச்சிறையில் இறந்தது தொடர்பாக ஐகோர்ட் மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரித்தது. இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிசிஐடி டிஎஸ்பியிடம் நீதிபதிகள் செல்போனில் தொடர்பு கொண்டு விசாரித்தனர். பின்னர் நீதிபதிகள், ‘‘துணிச்சலாக சாட்சியம் அளித்த தலைமை காவலர் ரேவதிக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும். அவர் மற்றும் குடும்பத்தினர் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். இந்த வழக்கில் சிபிசிஐடியினருக்கு தேவையான வசதிகள் செய்து தர வேண்டும். வழக்கை திறம்பட நடத்த நீதிமன்றமே ஒரு அரசு வழக்கறிஞரை நியமிக்கும்’’ என்றனர்.

பின்னர், இந்த வழக்கில் சாட்சியம் அளித்த ரேவதியின் பாதுகாப்பை உறுதிபடுத்த கூறிய நீதிபதிகள், செல்போனில் அவரைத் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது ரேவதியின் தைரியத்தை பாராட்டிய நீதிபதிகள், நீதிமன்றம் அவருக்குத் துணையாக இருக்கும் என கூறி நம்பிக்கை தெரிவித்தனர். ஒரு வழக்கில் சாட்சியம் அளித்தவருக்கு நீதிபதிகளே போனில் பேசி ஆறுதல் அளித்தது இதுதான் முதன்முறை என வக்கீல்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் இனி நடக்கக்கூடாது

ஐகோர்ட் மதுரை கிளை விசாரணையில் ஏடிஜிபி தாமரைக்கண்ணன் வீடியோ கான்பரன்சிங்கில் நேற்று ஆஜராகி ‘‘காவல்துறையினரின் மன அழுத்தத்தை குறைத்திட ஒவ்வொருவரின் மன அழுத்த அளவும் தனிப்பட்ட முறையில் கண்காணிக்கப்படுகிறது’’ என்றார். மனநல ஆலோசகர்கள், ‘‘காவல்துறையில் 10.67 சதவீதம் ேபர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 சதவீதம் பேர் மன அழுத்த நோயால் பாதித்துள்ளனர். கொரோனாவுக்கு பின் மன அழுத்த பாதிப்பு அதிகரிக்கலாம்’’ என்றனர். கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன், ‘‘தமிழகத்தில் 1.2 லட்சம் காவல்துறையினரில் இதுவரை 90 ஆயிரம் பேருக்கு கவுன்சலிங் வழங்கப்பட்டுள்ளது’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், ‘‘கொரோனாவிற்கு பின் மன அழுத்தம் அதிகரிக்கும் என்பது மிகுந்த வேதனையை தருகிறது. ஒரு மனிதன், இன்னொரு மனிதனை எதற்காக அடிக்கிறான்? இது காட்டுமிராண்டித்தனமானது. இவர்களுக்கு மனதில் ஏதோ பிரச்னை இருப்பதால் தான் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். நூற்றாண்டிற்கும் இதுபோன்ற சம்பவம் இனி தமிழகத்தில் நடக்கக்கூடாது” என தெரிவித்தனர்.

Related Stories: