லால்பாக் ராஜா கணபதியும் இந்தாண்டு நஹி மோர்யா... விழா ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு

மும்பை: கொரோனா காரணமாக மும்பையில் மிகப் பிரசித்தி பெற்ற ‘லால்பாக் ராஜா’ விழா மண்டல், இந்தாண்டு கணபதி விழாவை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. விநாயகர் சதுர்த்தி வந்து விட்டாலே மும்பையில் கோலாகலம், கொண்டாட்டம்.  ‘கணபதி பப்பா மோர்யா’ கோஷம் விண்ணை பிளக்கும். முதல் கடவுளான கணபதியை ‘விரைந்து வா...’ என்று அழைப்பதே இதன் அர்த்தம். ஆனால், இந்தாண்டு கொரோனாவின் சனிப் பார்வையில், மும்பையில் புகழ்பெற்ற மண்டல்கள் நடத்தும் கணபதி விழாக்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.

மும்பையில் மிகவும் பிரசித்தி பெற்ற லால்பாக் ராஜா கணபதி மண்டல் விழாக்குழு சார்பில் ஆண்டுதோறும் 10 நாள் கணபதி விழா மிக விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த விநாயகரை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசிப்பார்கள். 24 முதல் 48 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்தால் மட்டுமே இந்த விநாயகரை தரிசிக்க முடியும். ஆனால், இந்தாண்டு கொரோனா காரணமாக மும்பையில் கணபதி விழா ஏற்பாடுகள் முடக்கி விட்டன. ஏற்கனவே, மும்பையின் பணக்கார கணபதியாக கருதப்படும் வடாலா ஜி.எஸ்.பி. சேவா மண்டல், இந்தாண்டு கணபதி விழாவை ரத்து செய்து விட்டது.

அதேபோல், லால்பாக் ராஜா கணபதி மண்டலும் இந்தாண்டு விழாவை ரத்து செய்வதாக நேற்று அறிவித்தது. இது குறித்து இந்த மண்டல் செயலாளர் சுதிர் சால்வி கூறுகையில், ‘‘இந்தாண்டு எங்கள் மண்டல் சார்பில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்படாது. இந்த விழாவுக்கு மாற்றாக, ரத்த தானம். பிளாஸ்மா தான முகாம் நடத்தப்படும், கொரோனாவால்  உயிரிழந்த போலீசாரின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்படும். ஏற்கனவே, முதல்வர் நிவாரண நிதிக்கு ₹25 கோடி நன்கொடை வழங்கியுள்ளோம். லடாக்கில் சீன ராணுவத்துடன் நடந்த மோதலில் வீரமரணம் அடைந்த 20 இந்திய வீரர்களின் குடும்பத்தினரும் கவுரவிக்கப்படுவார்கள்,’’ என்றார்.

* லால்பாக் ராஜா கணபதி மண்டல் சார்பில் 1934ம் ஆண்டு முதல் கணபதி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

* இந்த ஆண்டுதான் முதல் முறையாக இந்த மண்டலின் கணபதி விழா கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

* ஆகஸ்ட் 22ம் தேதி தொடங்கும் கணபதி விழாவை ஆடம்பரமின்றி எளிமையாக. 4 அடி உயர சிலைகளை மட்டுமே வைத்து விழா நடத்தும்படி மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே ஏற்கனவே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Stories: