முதல் கஸ்டமருக்கு தங்க கத்திரிக்கோலால் முடி வெட்டி அசத்திய சலூன் கடைக்காரர்

கோலாப்பூர்: சலூன்கள் திறக்கப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்த கடைக்காரர் ஒருவர் தனது மட்டற்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக கடைக்கு வந்த முதல் வாடிக்கையாளருக்கு தங்க கத்திரிக்கோலை பயன்படுத்தி முடி வெட்டினார்.

மார்ச் மாதம் ஊரடங்கு அமல் செய்யப்பட்டதை தொடர்ந்து சலூன்கள் உள்ளிட்ட வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டன. ஜூன் மாத தொடக்கத்தில் இருந்து மகாராஷ்டிரா அரசு ஊரடங்கில் பல தளர்வுகளை அறிவித்தது. 28ம் தேதி சலூன்கள் மற்றும் அழகு நிலையங்களை சில நிபந்தனைகளுடன் திறக்க மாநில அரசு அனுமதித்தது. இதனால் 3 மாதங்களுக்கு பின்னர் மகாராஷ்டிராவில் சலூன் கடைகள் திறக்கப்பட்டன.

இந்த நிலையில் சலூன் கடைகளை திறக்க அரசு அனுமதியளித்தது சலூன் கடைக்காரர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோலாப்பூரில் சலூன் கடை வைத்திருக்கும் ராம்பாவு சங்கல்ப் என்பவர், தனது மகிழ்ச்சியை வெளிக்காட்டும் விதமாக 3 மாதங்களுக்கு பின்னர் தனது கடைக்கு வந்த முதல் வாடிக்கையாளருக்கு தங்க கத்திரிக்கோலால் முடி வெட்டினார். அனைத்து சலூன் கடைக்காரர்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக தான் தங்க கத்திரிக்கோலால் வாடிக்கையாளருக்கு முடி வெட்டியதாக ராம்பாவு சங்கல்ப் தெரிவித்தார். இந்த கத்திரிக்கோல் 10 சவரன் தங்கத்தால் செய்யப்பட்டது. கோலாப்பூரில் பிறந்த குழந்தைகளுக்கு மொட்டை அடிக்க இந்த தங்க கத்திரிக்கோலை தான் பயன்படுத்தி வருவதாக அவர் கூறினார். குழந்தைக்கு முதன் முதலாக மொட்டை அடிக்கும் போது தங்க கத்திரிக்கோலை பயன்படுத்துவதை கோலாப்பூர் மக்கள் விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

Related Stories: