பவுஞ்சூரில் கொரோனா வேகமாக பரவுவதால் 3 நாட்களுக்கு தொடர் கடையடைப்பு

செய்யூர்: செய்யூர் அருகே பவுஞ்சூர் பகுதியில் கொரோனா அதிவேகமாக பரவி வருகிறது.  இதனால், சுற்று வட்டார மக்கள் நோய் பரவும் அச்சத்தில் உள்ளனர். இதையொட்டி, வியாபாரிகள் தாமாகவே முன்வந்து 3 நாட்களுக்கு முழு கடையடைப்பு செய்வதாக அறிவித்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தாலுகா பவுஞ்சூர் மற்றும் அதனை சுற்றி, 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. மைய பகுதியாக உள்ள இங்கு, தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு தேவைகளுக்காக பஜார் பகுதிக்கு வந்து செல்கின்றனர். மேலும், லத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், ஆரம்ப சுகாதார நிலையம், டாஸ்மாக் கடை, அரசு வங்கிகளும் உள்ளதால், எப்போதும் பொதுமக்களின் கூட்டம் நிறைந்து காணப்படும்.

நோய் தொற்று பரவுவதை அறியாமல் இப்பகுதியில் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டதால், கொரோனா தொற்று இந்த பஜார் பகுதியில் சத்தமில்லாமல் பரவி வருகிறது. கடந்த சில வாரங்களாக 1, 2 என இருந்த தொற்று, கடந்த வாரம் 8 ஆக உயர்ந்தது. பின்னர், 2 நாட்களுக்கு முன் 10 என அதிகரித்தது. இந்நிலையில், நேற்று மேலும் 4 பேருக்கு கொரோன தொற்று உறுதியாகி, எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது. இதனால், பவுஞ்சூர் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதையொட்டி, இங்குள்ள வியாபாரிகள் தானாகவே முன்வந்து நேற்று முதல் 3 நாட்களுக்கு முழுவதுமாக கடைகள் அடைப்பு செய்வதாக தெரிவித்துள்ளனர்.

Related Stories: